உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தமிழகத்தில் இருந்து கவர்னர் பதவிக்கு யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இருந்து கவர்னர் பதவிக்கு யாருக்கு வாய்ப்பு?

''மூ த்த தலைவர் மறைவை கண்டுக்கவே இல்ல பா...'' என்ற ஆதங்கத்துடன் வந்தார், அன்வர்பாய். ''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''சென்னை, சத்தியமூர்த்தி பவன்ல சமீபத்தில், தமிழக காங்., செயற்குழு கூட்டம் நடந்துச்சு... காமராஜர் காலத்துல, ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட காங்., தலைவரா இருந்த, 93 வயசான வி.ஆர்.பகவான் அன்னைக்கு தான் இறந்து போனாரு பா... ''இவர், மறைந்த முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்திற்கு நெருக்கமானவர்... காங்., செயற்குழு உறுப்பினராகவும் இருந்திருக்காரு பா... ''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வசித்த பகவான் இறந்த தகவல் கிடைச்சும், செயற்குழுவுல அவருக்கு இரங்கல் தீர்மானம் போடல... இத்தனைக்கும், பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ.,வா, காங்., கட்சியின் துரை சந்திரசேகர் தான் இருக்காரு பா... ''அவர் உள்ளிட்ட எந்த கட்சி நிர்வாகியும், பகவான் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் போகல... இப்படித்தான் காங்., கட்சிக்காரங்க இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''அன்னைக்கு வந்தவர், இன்னைக்கு எங்க போனார்னு கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''திருப்பூரில், நொய்யல் கரை மேம்பாட்டு திட்டத்தில், சத்யா காலனி பகுதியில மாநகராட்சி சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்ட திட்டமிட்டா... இதுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சா ஓய்... ''இதை கேள்விப்பட்ட, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஓடோடி வந்து, 'மையத்தை வேறிடத்துக்கு மாத்துங்கோ'ன்னு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்... இப்ப, திருப்பூர்ல ஒரு மாசத்துக்கும் மேலா குப்பை பிரச்னை தலைவிரிச்சு ஆடறது ஓய்... ''ஊராட்சி பகுதிகள்ல இருக்கற பாறைக்குழிகள்ல மாநகராட்சி பகுதி குப்பைகளை கொட்ட, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கறா... இதனால, குப்பைகள் சரியா அகற்றப்படாம நகரமே நாறி போய் கிடக்கறது ஓய்... ''ஆனா, துறையின் அமைச்சரான நேருவை இந்த பக்கமே காணோம்... 'குப்பை அள்ளும் டெண்டரை எடுத்துள்ள நிறுவனம், அவருக்கு வேண்டிய நிறுவனம் என்பதால, இதை அமைச்சர் கண்டுக்கவே இல்ல'ன்னு எதிர்க்கட்சியினர் புகார் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''கவர்னர் பதவிக்கு நாலஞ்சு பேரின் பெயர்கள் அடிபடுதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''தமிழகத்தை சேர்ந்த தமிழிசை, சி.பி.ராதா கிருஷ்ணன், இல. கணேசன்னு மூணு பேர், மாநில கவர்னர்களா இருந்தாங்களே... இதுல, இல.கணேசன் காலமாகிட்டாரு... தமிழிசை, மாநில அரசியலுக்கு திரும்பினாங்க... சி.பி.ஆர்., இப்ப துணை ஜனாதிபதி தேர்தல்ல நிற்கிறாருங்க... ''இதனால, தமிழகத்துல பா.ஜ.,வுக்கு உழைச்சவங்களுக்கு கவர்னர் பதவி வழங்க, மேலிடம் முடிவு பண்ணி யிருக்கு... வர்ற சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றிக்கும் இது உதவும்னு மேலிடம் கணக்கு போடுதுங்க... ''அந்த வகையில், 'ஏற்கனவே ரெண்டு மாநில கவர்னராக இருந்த தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பா.ஜ., மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கு'ன்னு பா.ஜ., வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 21, 2025 16:55

அவ்வளவுதான், காங்கிரசில் மூத்த தலைவர்கள், தியாகிகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை அப்படி ஒருவர் இருந்தாரா என்றே பலருக்கு தெரியாது


Anantharaman Srinivasan
ஆக 21, 2025 00:28

எல்லா பெரிய தலைகளும் அரசியலில் அள்ளாடுவதை விட கவர்னர் post கிடைத்தால் ஹாய்யாக மல்லாந்து படுக்க ரெடியாயிருக்காங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை