உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  பெண் போலீசாரிடம் அத்துமீறும் அதிகாரி!

 பெண் போலீசாரிடம் அத்துமீறும் அதிகாரி!

ஏலக்காய் டீயை பருகியபடியே, “காட்டி குடுத்துடுறாங்க பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். “யார், யாரை காட்டி குடுக்கறா ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள்ல கஞ்சா விற்பனை அமோகமா நடக்கு... மண்டபம் பகுதியில் கஞ்சா விற்கிறவங்க பத்தி, உள்ளூர் இளைஞர்கள் ரெண்டு பேர், போலீசாரிடம் புகார் குடுத்தாங்க பா... “அந்த ரெண்டு பேரையும் கஞ்சா கும்பலிடம், போலீசார், 'போட்டு' குடுத்துட்டாங்க... ரெண்டு பேரையும், கஞ்சா விற்பனை கும்பல் வீடு புகுந்து தாக்கிடுச்சு பா... “அவங்க படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில சேர்ந்தாங்க... அப்பவும், கஞ்சா கும்பலுக்கு சாதகமாவே நடந்துக்கிட்ட போலீசார், 'தகராறு வழக்கு பதிவு பண்றோம்... விஷயத்தை பெருசாக்க வேண்டாம்'னு சமரசம் பேசியிருக்காங்க பா... “அதாவது, 'போதை விற்பனை, குற்றச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியே வரக்கூடாது'ன்னு எஸ்.பி., சந்தீஷ் போட்டிருக்கும் வாய்மொழி உத்தரவை, 'போலீசார் தங்களுக்கு சாதகமா பயன்படுத்தி, மாமூல் மழையில குளிக்கிறாங்க'ன்னு, சமூக ஆர்வலர்கள் எல்லாம் புலம்புறாங்க பா...” என்றார் அன்வர்பாய். “கையெழுத்து போட தயங்கறார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “விருதுநகர்ல, காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை நிறைவேற்ற, சமீபத்துல நகராட்சி சார்பில், 'டெண்டர்' விட்டிருக்கா... ஏற்கனவே, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கற உதயா மகளிர் குழு, விருதுநகர் நகராட்சி தி.மு.க., தலைவரான மாதவனின் ஆதவன் மகளிர் குழு உட்பட எட்டு பேர், இந்த டெண்டர்ல கலந்துண்டா ஓய்... “இதுல, எந்த விதிகளையும் கடைப்பிடிக்காம ஆதவன் குழுவினருக்கு டெண்டர் குடுத்துட்டா... இதை எதிர்த்து, உதயா மகளிர் குழுவினர் ஐகோர்ட் மதுரை கிளைக்கு போனா... அப்ப, டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ஐகோர்ட்ல உத்தரவு போட்டிருக்கா ஓய்... “ஆனா, டெண்டர் ஆவணங்கள்ல ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கறதால, எப்படி அதை சமர்ப்பிக்கறதுன்னு தெரியாம நகராட்சி நிர்வாகிகள் தலையை பிய்ச்சுண்டு இருக்கா... இந்த மன உளைச்சலால நகராட்சி கமிஷனர் விஜயகுமார், எந்த பைல்கள்யும் கையெழுத்து போடறது இல்ல... இதனால, நகராட்சி பணிகள்ல சுணக்கம் ஏற்பட்டிருக்கு ஓய்...” என்றார் குப்பண்ணா. “பெண் போலீசா ரிடம் சேட்டை பண்ணுதாரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி. “துாத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரியை தான் சொல்லுதேன்... பெண் போலீசாரிடம் ஏடாகூடமா நடந்துக்கிடுதாரு வே... “பெண் போலீசாருக்கு தினமும், 'குட்மார்னிங் மெசேஜ்' அனுப்புறவர், கூடவே இதயம் படத்தையும் சேர்த்து அனுப்புறதால, பெண் போலீசார் குடும்பத்துக்குள்ள குழப்பம் ஏற்படுது... இதுக்கு முன்னாடி இவர் வேலை பார்த்த இடங்கள்லயும், இப்படி தான் இருந்திருக்காரு வே... “பெண் போலீசாருக்கு விடுமுறை கூட தராம, 'டார்ச்சர்' பண்ணுதாரு... இவரை பத்தி தனிப்பிரிவு அதிகாரியிடம் பெண் போலீசார் புகார் தெரிவிச்சும், உயர் அதிகாரிகள் பார்வைக்கு அவர் எதையும் கொண்டு போகல வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “பவுல் ஜேசுதாசன், இப்படி உட்காரும்... உம்ம நண்பர் செந்தில்வேல்குமார் வரலையா ஓய்...” என நண்பரிடம் குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
செப் 29, 2026 08:08

தமிழ் நாட்டில் எந்த கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம், ஊழல், பெண் பித்தர்களின் அழிச்சாட்டியம் இவைகளை ஒழிக்க முடியாது