உள்ளூர் செய்திகள்

அகந்தைக்கு அடி!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அறிவியல் ஆசிரியர் கேசவராவ், இதயம் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.வகுப்பு முடிவில், 'இதயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, நோட்டு புத்தகத்தில், நாளை வரைந்து வர வேண்டும்; அதற்கு, ஐந்து மதிப்பெண் உண்டு...' என்றார். அனைவரும் படம் வரைந்து, ஆசிரியரின் மேஜையில் வைத்தோம். எனக்கு நான்கரை மதிப்பெண் போட்டிருந்தார். நான் தான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன். புத்தகத்தில் உள்ளபடியே வரைந்திருந்தேன். அனைவரும் பாராட்டினர். அரை மதிப்பெண் குறைந்திருந்ததால் வருத்தம் அடைந்தேன். ஆசிரியரை அறையில் சந்தித்து, 'ஐயா... புத்தகத்தில் உள்ளபடி வரைந்திருக்கிறேன்; ஆனால், முழு மதிப்பெண் போடவில்லையே...' என கேட்டேன். 'நன்றாகத்தான் வரைந்திருந்தாய்... இவ்வளவு தான் தர முடியும்...' என உறுதியாக கூறிவிட்டார். நீண்ட நேரம் நின்று கெஞ்சியதால், 'கல்வி ஆண்டு இறுதியில், உனக்கு பதில் கிடைக்கும்...' என்றார். காத்திருந்து கல்வி ஆண்டு நிறைவில் சந்தித்த போது, 'முழுமையாக மதிப்பெண் கொடுத்திருந்தால், உன் மனதில் அகந்தை உருவாகியிருக்கும். மாணவர்களிடம் சமநிலை உணர்வு ஏற்பட வேண்டும் என்று தான், முழுமையாக போடவில்லை...' என்றார். அந்த அறிவுரையால், அகந்தை நீக்கி வாழ வேண்டும் என அறிந்தேன். அதன் அடிப்படையில், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டேன். சமூகத்தில் மதிப்புடன் வாழ்கிறேன். இப்போது என் வயது, 65; பொது இன்சூரன்ஸ் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அகந்தை அகற்ற அறிவுரைத்தவரை மனதில் கொண்டுள்ளேன்.- ஏ.ராமலிங்கம், திருப்பூர். தொடர்புக்கு: 98422 52650


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !