காளி தந்த வரம்!
வீரனின் தந்தை மிகவும் ஏழை; கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். புத்திசாலியான வீரனைப் பள்ளிக்கு அனுப்ப வசதியில்லை. படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்டியது.ஒரு நாள் -நகரில் வேலை முடித்துக் காட்டு பாதையில், திரும்பிக் கொண்டிருந்தான் வீரன்; களைப்பு, பசி மயக்கத்தால் காளி கோவில் வாசலில் படுத்தான்; நன்றாக உறங்கி விட்டான்.துாக்கத்தில், 'காளிதேவியே... என்னை ஏன் சோதிக்கிறாய்; அருள் புரிய மாட்டாயா' என, வேண்டினான்.அவனது நற்குணத்துக்கு மனமிரங்கி, 'வருந்தாதே... உனக்கு வரம் தருகிறேன்; அதன்மூலம் மேதாவி ஆவாய்; கஷ்டம் தீரும்; பாராட்டும், பதவியும் தேடி வரும்...' என்றாள்.மகவும் மகிழ்ந்து, 'என்ன வரம் தாயே...' என்றான்.'மிருகங்கள், பறவைகள், பேசும் மொழியை புரிந்து கொள்ளும் சக்தியை பெறுவாய்; இதை மிகவும் ரகசியமாக வைத்துக்கொள். தவறி வெளியில் கூறினால், மரணம் ஏற்படும்...' என எச்சரித்து மறைந்தாள்.துள்ளி எழுந்தான் வீரன். காளி கொடுத்த வரத்தின்படி மரத்தில், ஜோடிக் கிளிகள் பேசுவதை கேட்டான்.சோகத்துடன் ஆண் கிளி, 'பார்த்தாயா... விதியின் விளையாட்டை... அந்த நீரற்ற ஆற்றுக்குள் இளவரசன், நண்பனுடன் படுத்துள்ளான்! சிறிது நேரத்தில் காட்டு வெள்ளம் இருவர் உயிரையும் பறிக்க போகிறது...' என வருந்தியது.அந்த உரையாடலைக் கேட்டு, பதறினான் வீரன்.இருவரையும் காப்பாற்றும் எண்ணத்துடன் ஆற்றுக்குள் ஓடினான்.இதைக் கண்ட இளவரசன், 'ஏன் ஓடி வருகிறாய்... என்ன விஷயம்...' என்றான்.'இளவரசே... பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது; சிறிது நேரத்தில் காட்டு வெள்ளம் பாய்ந்து வர போகிறது; கரைக்கு சென்று விடுங்கள்...' என கெஞ்சினான்.'காட்டு வெள்ளமா... என்ன பிதற்றுகிறாய்...' என, ஏளனமாக கேட்டான் இளவரசன். வீரன் விடவில்லை; இருவரை பிடித்து கரைக்கு அழைத்துச் சென்றான். சிறிது நேரத்திலேயே காட்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. மரம், செடி, கொடிகளை அடித்துச் சென்றது. மரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரைகளும் அடித்து செல்லப்பட்டன.வீரனை கட்டி தழுவி நன்றி கூறினான் இளவரசன். அரண்மனைக்கு அழைத்து சென்று உபசரித்தான். விவரத்தை கூறி, மன்னரிடம் அறிமுகப்படுத்தினான்.பெரும் மகிழ்ச்சி அடைந்து, 'காட்டு வெள்ளம் வரப்போவதை எப்படி அறிந்தாய்...' எனக் கேட்டார் மன்னர்.'இது காளிதேவியின் அருள்... அவ்வளவுதான்; அதற்கு மேல் கேட்காதீர்கள்...' வீரனை வற்புறுத்த விரும்பாத மன்னர், அரசவையில் பிரதான ஆலோசகராக நியமித்தார். தனி மாளிகையில் சகல வசதிகளும் தந்த குடும்பத்துடன் தங்க வைத்தார்.வீரனின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. 'திடீர் அதிர்ஷ்டம் எப்படி வந்தது...' என ஆவலோடு கேட்டனர்.காளி தேவி அருள்புரிந்ததாக கூறினான். மற்ற விவரங்களை மறைத்தான்.காட்டில் காளிதேவி கோவிலை புதுப்பிக்கும் விருப்பத்தை, மன்னரிடம் தெரிவித்தான் வீரன். அதன்படியே செய்தார். தினமும் காவலர்களுடன் குதிரையில் சென்று, பூஜைகள் நடத்தி வந்தான் வீரன்.அந்த ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டார் மன்னர். அதையொட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தான் வீரன். மாடுகள் பேசியது, அவன் காதில் விழுந்தது. ஒரு காளை, 'ஜல்லிக்கட்டுக்கு வரும், இளவரசரை, மயிலைக்காளை பலி வாங்க வாய்ப்புள்ளது. நாளைய விழா, சோகத்தில் முடிய போகிறது...' என கவலை தெரிவித்தது.இளவரசனை காப்பாற்ற முடிவு செய்தான் வீரன். மெய்க்காப்பாளர்களிடம் விவரத்தை சொல்லி எச்சரித்தான்.விழா மைதானத்துக்கு வந்தான் இளவரசன்; யாரும் எதிர்பாராத நேரத்தில், கட்டை அறுத்த மயிலைக் காளை பாய்ந்து வந்தது. விழிப்புடன் இருந்த காவலர்கள், வாள்களை வீசி காளையை மடக்கினர்.கண்மூடி திறப்பதற்குள் நிகழ்வு முடிந்தது. மக்களும், மன்னரும், வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.திகைப்பு நீங்காமல், 'இது எப்படி நடந்தது...' என்று விசாரித்தார் மன்னர். மெய்க்காப்பாளர்கள், 'வீரன் தான் எச்சரித்தார்...' என்றனர்.'என் மகனை மீண்டும் காப்பாற்றி விட்டாய்; என்ன கைமாறு செய்வதென்று தெரியவில்லை... இந்த விபத்தைப் பற்றி, நீ அறிந்த ரகசியத்தை கூறியே தீர வேண்டும்... மறுத்தால், கடும் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்...' என எச்சரித்தார் மன்னர்.காளிக்கு கொடுத்த வாக்கை மீறுவதா, அரச கட்டளையை மதிப்பதா என புரியாமல் தவிர்த்தான் வீரன். இறுதியில், மன்னர் கட்டளையை மதிக்க முடிவு செய்தான். அதன்படி உண்மையை கூறினான்.உடனே, மயங்கி விழுந்து இறந்தான். முட்டாள்தனமான கட்டளையால், வீரனை இழக்க நேர்ந்ததை எண்ணி வருந்தி, 'காளி மாதா...மன்னித்து விடு...' என கதறினார் மன்னர். அங்கு தோன்றிய காளிதேவி, வீரன் உயிர்பெற்று எழச் செய்தாள். நிம்மதி அடைந்தார் மன்னர்.இளவரசனுக்கு ஆட்சியில் உதவி, புகழ் பெற்றான் வீரன்.இளந்தளிர்களே... கடும் உழைப்பு நன்மை தரும்.