உள்ளூர் செய்திகள்

மாயசதுரங்களில் சாதிக்கும் சிறுவன்!

ஐரோப்பிய நாடான, ஹங்கேரியை சேர்ந்தவர் ஏர்னோ ரூபிக்; சிற்ப கலைஞர். கட்டடக்கலைப் பேராசிரியராக பணியாற்றியவர். பொறியியல் கணக்கீட்டு அடிப்படையில், ஒரு கணக்கு புதிர் விளையாட்டு பொம்மையை, 1974ல் உருவாக்கினார். அதற்கு, 'ரூபிக் கியூப்' என பெயர் சூட்டியிருந்தார். இதன் ஒவ்வொரு சதுர பக்கத்திலும், ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாச வண்ணங்களில் அமைந்து இருக்கும். சிதறிக்கிடக்கும் அவற்றை நிற அடிப்படையில் ஒருங்கிணைக்க வேண்டும். ஆரம்பத்தில் இது, 'மேஜிக் கியூப்' என அழைக்கப்பட்டது. இந்தவகை கியூப் பொம்மை, விற்பனை வணிக ரீதியாக பெரும் வெற்றி கண்டது. கண்டுபிடித்த சில ஆண்டுகளில், 35 கோடிக்கு மேற்பட்ட கியூப் பொம்மைகள் விற்றன; உலகில் அதிகம் விற்பனையாகும் கணக்கு புதிர் பொம்மை என்ற புகழையும் பெற்றது.அன்றாடம் பேருந்து, ரயில் பயணங்களின் போது, இந்த மாயசதுர பொம்மையை பலர் சுழற்றிக்கொண்டிருப்பதை காணலாம். புதிதாக விளையாடுபவர், ஒரு பக்கத்தை முறையாக சரி செய்ய, சில மணிநேரம் கூட ஆகும்; விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்றவர் சில நிமிடங்களிலே, எல்லா பக்கங்களையும் சரி செய்து விடுவார். கணக்கை அடிப்படையாக கொண்டது இந்த பொம்மை.இப்போது, முக்கோணம், நீள் சதுரம் என பல வடிவங்களில், கியூப் பொம்மைகள் வந்து விட்டன. விளையாடுவதற்கு தனி பயிற்சியும் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி, வெல்பவர் பெயர், சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. இந்த சாதனையை, கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் சந்திரசேகர் - திவ்யாவின் மூத்த மகன் ரித்விக் சூர்யா நிகழ்த்தியுள்ளான். பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறான். ஏழு வயதில், அப்பா வாங்கிக் கொடுத்த கியூப் பொம்மையை உருட்டி விளையாடியவன், சில நாட்களிலேயே நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டான். மாயசதுரம் எப்படி கலைந்திருந்தாலும், சில நிமிடங்களில் சரி செய்து விடுவான். இவனது ஆர்வம் கண்டு, உலகில் வெளியான அனைத்து வகை கியூப் பொம்மைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக வாங்கிக் கொடுத்தனர். சிலவற்றை சரி செய்ய பயிற்சி பள்ளியில் கற்றுக் கொண்டான். பின், எப்படிப்பட்ட கியூப் பொம்மையையும் சரி செய்து விடும் திறமை பெற்றான்.இதில் உலக சாதனை படைக்க முடிவு செய்து உழைத்தான். ஏற்கனவே, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' என்ற புத்தகத்தில், 12 வயது சிறுவன், 32 வகை கியூப்களை, 48 நிமிடத்தில் சரி செய்தது, உலக சாதனையாக பதிவாகியிருந்தது. இதை முறியடிக்க தயாரானான் ரித்விக் சூர்யா. முறைப்படி விண்ணப்பித்து நடுவர்கள் முன், ௩௭ வகை கியூப்களை, 47 நிமிடம், 53 வினாடிகளில் சரி செய்து, புதிய சாதனை படைத்தான்; அதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.குழந்தைகளே... ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் எந்த துறையிலும் சாதனை படைக்கலாம்.- எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !