உள்ளூர் செய்திகள்

வலையில் ஒரு இதயம்! (11)

முன்கதை: மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை பெற்ற மாணவி ஸ்ருதியின் எண்ணத்தில் கல்லுாரியில் சேர்ந்த போது நடந்தவை வந்தன; நண்பர்களுடன் இரவு நேரத்தில் வெளியே போனது குறித்து அம்மா அறிந்தால் என்னாகும் என்ற அச்சமிருந்தது. இனி - 'நான் இங்க வர்றத அம்மா கிட்ட சொல்லல...''சரி... உன் அம்மா போன் செஞ்சா...' 'என் போனை, ஸ்விட்ச் ஆப் செஞ்சிட்டேன்...' என்றாள் ஸ்ருதி.'நான் எடுக்காம இருந்தா தப்பா நினைக்க மாட்டாங்களா...' என்றாள் பூர்ணா.'சார்ஜில் போட்டு இருந்தேன்னு கூறி சமாளிச்சிடலாம்...' ஸ்ருதியின் யோசனையில், பூர்ணாவுக்கு ஆர்வமில்லை என்றாலும், தோழிக்காக தலையசைத்தாள்.அந்த தெருவில், கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடந்தனர்.அவர்கள் விடுதிக்கு, திரும்பிய போது, இரவு 10:00 மணி ஆகியிருந்தது.மொபைல் ஆன் செய்த, அடுத்த நிமிடமே அம்மாவிடமிருந்து அழைப்பு, 'என்னாச்சு ஸ்ருதி... மொபைலை ஏன் அணைத்து வெச்சிருக்க; எங்க போயிருந்த...' என கேட்டாள். 'வார கடைசி நாள்ன்னு, ஓட்டல் போயிருந்தோம்மா... பேட்டரி லோவாகி மொபைல் அணைந்திருக்கு; இப்போ தான் பார்த்து சார்ஜ் போட்டேன்...' என்றாள் ஸ்ருதி. 'அதிகமா வெளில சுத்தாதே... லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்கிறோம்; நீ நல்லா படிக்கணும் ஸ்ருதி...'குரலில் கண்டிப்பும், அன்பும் கலந்திருந்தது.'நல்லா தான் படிக்கிறேன்... அடுத்த வாரம் தேர்வு இருக்குது; மதிப்பெண் பார்த்துட்டு அப்புறம் பேசும்மா...' என்றாள் ஸ்ருதி. 'சரி... மணி 10:30 ஆகுது; அப்பா, இப்போ தான் வந்தாரு; அவருக்கு சாப்பாடு கொடுக்கணும்...' என்றாள் சுகந்தி. பெருமூச்சுடன் படுக்கையில் சரிந்தாள் ஸ்ருதி.''எழும்புமா நேரமாச்சு...'' என அம்மாவின் குரல் கேட்டு, விழித்தாள் ஸ்ருதி. கல்லுாரி நினைவுகளில் இருந்து விடுபட்டு, வீட்டில் இருக்கும் எதார்த்தம் பிடிபட அவளுக்கு சில வினாடிகள் ஆகின.மொபைல் எடுத்து குறுஞ் செய்தி பார்க்க ஆரம்பித்தாள்.'காலை, 11:00 மணிக்கு, நீ மட்டும் வர முடியுமா...'மருத்துவர் அருணாவின் குறுஞ்செய்தி வந்திருந்தது.''அம்மா... மருத்துவர் அருணா, காலை, 11:00 மணிக்கு வர சொல்லியிருக்காங்க...'' ''பார்த்து பத்திரமா போயிட்டு வருவியா...''அக்கறையோடு அம்மா கேட்டதும் சிரித்தாள் ஸ்ருதி. ''நான் சின்னப் பிள்ளையா... மொழி தெரியாத பெங்களூரிலேயே இருந்துட்டேன்; பிறந்து வளர்ந்த சென்னையில, எனக்கு போயி வர தெரியாதாம்மா...'' என்றாள் ஸ்ருதி. சரியா, 10:00 மணிக்கு ஆட்டோகாரர் வந்து விட கிளம்பினாள் ஸ்ருதி.கிளினிக்கை அடைந்தாள் ஸ்ருதி.சிநேகப் புன்னகையுடன் வரவேற்று, ''எப்படி இருக்கிற...'' என்று குசலம் விசாரித்து, அவளுக்கு இருந்த படபடப்பை போக்கினார் மருத்துவர் அருணா.மெல்ல கல்லுாரி வாழ்க்கை குறித்து, மருத்துவர் பேச ஆரம்பிக்க, சின்ன தயக்கத்திற்கு பின், விக்ரம் பற்றி கூற ஆரம்பித்தாள் ஸ்ருதி.நிறைய பேச செய்து, சின்ன சின்ன கேள்விகளால் சிந்திக்க வைத்தார் அருணா. விக்ரமுடன் நட்பு வைத்து கொள்ள, ஸ்ருதி ஆர்வமாக இருந்தது தெரிந்தது.ஒரு நாள் -நண்பர்களுடன், சினிமா பார்க்க சென்றாள் ஸ்ருதி. மொபலை அணைத்து வைத்து விட்டு, பூர்ணாவிடம், 'அம்மா அழைத்தால், படம் பார்க்க வந்ததை கூறாதே...' என்றாள்.ஒப்புதலாய் சிரிப்பை உதிர்த்தாள் பூர்ணா.'எப்ப வெளில வந்தாலும் ஏன் போனை அணைத்து வைக்கிற...' என்றான் விக்ரம்.'விக்ரம் உன் மொபைலை கொஞ்சம் தர முடியுமா; அம்மாவுக்கு ஒரு கால் செஞ்சிக்குறேன்...' என்றாள் ஸ்ருதி.'உன்னோட மொபைல பேச வேண்டியது தானே...' என்றான் விக்ரம். 'ம்ஹூம்... இதுல கூப்பிட்டு, என் மொபைல் அணைஞ்சு கிடக்கு... சாயங்காலம் பேசுறேன்னு சொல்லிருவேன்...' என்றாள் ஸ்ருதி. எதிர்முனை எடுக்கப்படாததால், அதை அவனிடமே திரும்ப கொடுத்தாள்.'அவங்க போன் எடுக்கல விக்ரம்... வேலையா இருப்பாங்க போல... ஆனாலும், ஒரு குறுஞ்செய்தி போட்றலாமா...' என்றாள் ஸ்ருதி.'குறுஞ்செய்தி தானே, அதை நானே போட்டுறேன்...' என்றபடி அவள் கூறியதை அனுப்பினான் விக்ரம்.- தொடரும்...ரவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !