ஏதோ ஒரு பாட்டு!
சிவகாசி, இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2003ல், எல்.கே.ஜி., படித்த போது, பாட்டு, ஓவியம் வரைதல், நடனம், பேச்சு, விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தினர்.எந்த போட்டியிலும் நான் கலந்து கொள்ளவில்லை; அவற்றில் பயிற்சி தர யாரும் இல்லை. என் அம்மா, வெளியூரில் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் படித்து வந்தார்; விடுமுறைக்கு வரும்போது, சில பாடல்கள் சொல்லித் தந்திருந்தார்.அன்று, ஆங்கில, 'ரைம்ஸ்' போட்டி நடந்தது; அதில் பங்கேற்காததால் மரத்தடியில் அமர்ந்து இருந்தேன். போட்டி இறுதியில், 'வேறு யாராவது விரும்பினால் வந்து பாடலாம்...' என அறிவித்தனர். அப்போது என் மீது எறும்பு ஒன்று ஊர்ந்ததால், எதேச்சையாக எழுந்து தட்டி விட்டேன்; போட்டியில் பங்கேற்க எழுந்து நிற்பதாக எண்ணிய ஆசிரியை ராணி, என்னை துாக்கி, மேடையில் விட்டார்; எதுவும் புரியாமல் அமைதியாக நின்ற என்னை, 'பாடு...' என உற்சாகப் படுத்தினார்; அம்மா சொல்லிக் கொடுத்த, 'ரைம்ஸ்' நினைவுக்கு வர, பாடினேன்; முதல் பரிசு கிடைத்தது. எனக்கு, 21 வயதாகிறது; கஷ்டம் வரும் போது, அம்மாவை நினைத்துக் கொள்கிறேன்; அப்போது அன்று மேடையில் பாடியது நினைவுக்கு வந்து விடுகிறது.- ம.அபர்ணா, விருதுநகர்.தொடர்புக்கு: 99436 27121