உள்ளூர் செய்திகள்

சொல்ல மறந்த கதை!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது யாரால் என்று கேட்டால், மனப்பாடமாக தன்னலமற்ற தலைவர்களின் பெயரை, வரிசையாக சில நொடிகளில் ஒப்பித்து விடுவோம். ஆனால், சுதந்திரம் கொடுத்தது யார்... இப்படி ஒரு கேள்வி வந்தால் மிகவும் யோசிப்போம். இது மிகவும் முக்கியமான கேள்வி. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது.'ஐரோப்பியரான பிரிட்டிஷாரால் மட்டுமே இந்தியாவை ஆள முடியும்; இந்தியருக்கு சுதந்திரம் பற்றி என்னவென்றே தெரியாது' என்ற கருத்துடையவர், இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சில். அவரது கொள்கைக்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர் இங்கிலாந்து எதிர்கட்சி தலைவராக இருந்த கிளமெண்ட் அட்லி; இந்தியர் மீது நல்லெண்ணம் கொண்டிருந்தார்.இந்தியாவுக்கு தன்னாட்சி வழங்க, இங்கிலாந்து அரசு, சைமன் குழுவை அமைத்த போது, அதன் உறுப்பினர்களில் ஒருவராக இந்தியா வந்தார் அட்லி. இங்கு நடந்த ஆங்கிலேயரின் அடக்கு முறையை கவனித்தார். சுதந்திரத்துக்கான கொந்தளிப்பையும், போராட்டங்களையும் புரிந்து கொண்டார்; இந்தியரின் தேவையை தெரிந்து கொண்டார்.'இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் காட்டு மிராண்டிகள்; இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருப்பது தான் அவர்களுக்கு நலம் தரும்...' என்று வாதிட்டார் சர்ச்சில்.அவரிடம், 'இந்தியாவை, இந்தியர்களும், ஆப்பிரிக்காவை, ஆப்பிரிக்கர்களும் ஆளட்டும்; நாம் பிரிட்டன் ஆட்சியை மட்டும் பார்ப்போம்...' என்று காட்டமாக சொன்னார் இங்கிலாந்து தொழிலாளர் கட்சி தலைவராக இருந்த அட்லி.இதை கடுமையாக எதிர்த்த சர்ச்சில், 'பிரிட்டன் வலிமையான நாடு; இந்தியா வலுவற்றது; எனவே, பிரிட்டனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்; நான் வலிமையானவன்; அட்லி நோஞ்சான்...' என உறுமினார்.இப்படி கொக்கரித்துக் கொண்டிருந்த போது, 1945ல் இங்கிலாந்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் தோல்வியடைந்தார் சர்ச்சில். அவரை எதிர்த்த அட்லி வெற்றி வாகை சூடி பிரதமரானார். அப்போது, கிடைத்த நல்வாய்ப்பாக, என்ன நடந்தாலும் சரி என்று, 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினார்.இந்தியா, இந்தியர்களால் ஆளப்படுவதை மனதார நேசித்த அட்லியிடம், 'சர்ச்சிலை விட, நீங்கள் பலசாலியா...' என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு, 'ஆயிரம் சர்ச்சில்கள் எதிர்த்தாலும், இந்தியர்களின் சுதந்திர தாகத்தை தடுத்து நிறுத்த முடியாது; சுதந்திர சிந்தனை என்பது மிகவும் வலுவானது...' என்று ஆணித்தரமாக கூறினார். இந்தியர் பக்கம் நின்று, இந்திய மக்களின் சுதந்திர கனவை நிறைவேற்றிய அந்த மகானை மனதில் கொள்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !