சடன் பிரேக் போட்டவுடன்...
நான் ஒருகுக்கிராமத்தில் வசிக்கிறேன். பக்கத்து டவுனிலுள்ள பள்ளிக்கு பஸ்சில் செல்ல வேண்டும். அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தாவணி போட்ட பருவம். என் அம்மா ஆண் பிள்ளைகளிடம் பேசக்கூடாது; விளையாடக் கூடாது; அவர்களை தொடக்கூடாது என சொல்லியிருந்தார். நானும் கவனமாக இருந்தேன்.ஒருநாள்- நான் செல்லும் டவுன் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எதிரில் திடீரென ஒரு மாடு ஓடி வரவே, சடன் பிரேக் போட்டார் டிரைவர். சட்டென்று, என் பின்னால் நின்ற +2 மாணவன் என் மீது அப்படியே விழுந்து விட்டான். அவ்ளோதான் நான் பயந்துபோய் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்துவிட்டேன். அம்மா கேட்டதற்கு, 'அம்மா எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது' என்றேன்.திடுக்கிட்டுப் போன என் தாயார், 'என்னடீ சொல்ற?' என்று கேட்டபடி அப்படியே தலை சுற்றி உட்கார்ந்துவிட்டார். நான் அழுதுகொண்டே, 'பஸ்சில் ஒரு பையன் என் மீது விழுந்து விட்டான். அதனால் எனக்கு குழந்தை வந்துவிடும்தானே...' என்று சொல்லி 'ஓ' என அழுதேன்.அப்புறம்தான், என் அம்மாவிற்கு விஷயமே தெரிந்தது; நிம்மதி அடைந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட என் தோழிகள் சிரிப்பா சிரித்ததுடன் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லிவிட்டனர். வகுப்பாசிரியர், என்னை அன்போடு தனியே அழைத்துச் சென்று சில விபரங் களை அறிவியல் புத்தகத்தை வைத்து சொல்லிக் கொடுத்தார். அவை என்ன என்பது அப்போது புரியவில்லை என்றாலும் அதன் அர்த்தம் பிறகுதான் புரிந்தது. இந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. அந்த அளவிற்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். ஆனால், இன்றைய பிள்ளைகளுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எல்லாமே தெரியுது. கலிகாலம் இது.-எஸ்.ஜெமிமா பிரியா, அயனாவரம்.