உள்ளூர் செய்திகள்

ஆக்ரா கோட்டை!

டில்லியிலிருந்து, 199 கி.மீ., துாரத்தில் யமுனை நதிக்கரையில் உள்ளது ஆக்ரா கோட்டை. அக்பரா பாத் எனவும் அழைப்பர். இதன் சிறப்புகளை பார்ப்போம்...இந்த கோட்டை, 1573ல் புதுப்பிக்கப்பட்டது. அந்த பணியை கண்காணித்தவர், மன்னர் அக்பரின் படைத்தளபதி முகமது காசிம்கான். முக்கோண வடிவில், ஒன்றரை சதுர கி.மீ., பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் சுற்றுச் சுவர்கள், 70 அடி உயரத்தில் உள்ளன. இதை சுற்றி மூன்று புறமும் அகழிகள் உள்ளன. இதன் அருகே யமுனை நதி பாய்ந்து ஓடுகிறது. அக்பருக்கு பின் வந்த, மொகலாய மன்னர்கள் ஜகாங்கீர், ஷாஜகான், அவுரங்க சீப் ஆகியோர் கோட்டையில் புதிய கட்டடங்களை எழுப்பினர். கோட்டைக்குள் செல்ல வலிமையான பாலம் உள்ளது. நான்கு பெரிய வாயில்கள் உள்ளன.தென் வாயிலுக்கு, 'அமர்சிங் கேட்' என பெயர். மற்றொரு வாயில், 'டில்லி கேட்' என அழைக்கப்படுகிறது.அக்பரின் கலை உணர்வை பிரதிபலிக்கும், திவானி ஆம், திவானி காஸ், ஜோத்பாய் அரண்மனைகள் இங்குள்ளன. அவுரங்க சீப், தன் தந்தை ஷாஜகானை, சிறை வைத்திருந்த அறையும் உள்ளது. அந்த அறைச்சுவர்களில், பச்சை கிளி, மயில் வடிவ ஓவியங்கள் இருக்கின்றன.இங்குள்ள ஜஹாங்கீர் மகால் எழிலுடன் திகழ்கிறது. இதில், ஐந்து அடி உயர கல் தொட்டி ஒன்றும் உள்ளது. இதன் உள்ளே இறங்க படிகள் கட்டப்பட்டு உள்ளன. ஜஹாங்கீர் மகாலுக்கு அடுத்து, ரங்மஹால் இருக்கிறது. இது அரசியர் வாழ்ந்த அந்தப்புரமாகும். நடுப்பகுதியில் அக்பரின் படுக்கையறை உள்ளது; இது போல பல மாளிகைகள் சிதைந்த நிலையில் உள்ளன.உலகில் பலமிக்க கோட்டைகளில் ஒன்றாக விளங்குகிறது ஆக்ரா. இதை கட்ட, அன்றைய நாளில், 35 லட்சம் ரூபாய் வரை செலவு ஆனதாக கணக்கு உள்ளது. இக்கோட்டை, பலரால், பல காலங்களில் சிதைக்கப்பட்ட போதிலும், கம்பீரத்தையும், அழகையும் இழக்காமல் பொலிவுடன் திகழ்கிறது!- ஜி.ராஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !