நீங்காத நினைவு!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 8ம் வகுப்பு படித்த போது, கணக்கு ஆசிரியையாக இருந்தார் அனுராதா.காலாண்டு தேர்வில், திருத்திய விடைத்தாள்களை, மாணவ, மாணவியருக்கு வழங்கினார். என் விடைத்தாளில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் இருந்தது.மரத்தில் செய்யப்பட்ட அளவுகோலால் நான்கு போட்டு, முட்டி போட வைத்தார். கடைசி வரிசையில் அமர்ந்திருந்த என்னை இடம் மாற்றி, முன் வரிசைக்கு கொண்டு வந்தார்.தினமும் கணக்குகளை கரும்பலகையில் போட வைத்தார். அரையாண்டு தேர்வுக்கு முன் நல்ல முன்னேற்றம் தென்பட்டது.'கடைசி வரிசையில் அமர்ந்து பாடங்களை சரி வர கவனிக்காததால் தான், முன் வரிசைக்கு கொண்டு வந்தேன்...' என கூறினார்.முழு ஆண்டில் தேர்ச்சி பெற்ற கையோடு அந்த ஆசிரியையை சந்தித்து, 'என் முன்னேற்றத்துக்கு காரணம், தங்களின் முதல் வரிசை உத்திதான்...' என, பெருமிதத்துடன் நன்றி தெரிவித்தேன். பாராட்டினார்.தற்போது, என் வயது, 37; இப்போதும் போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளில், முன் வரிசையில் அமர்ந்தே கற்றுத் தேர்கிறேன். அந்த ஆசிரியை, நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.