உள்ளூர் செய்திகள்

மறக்க முடியாத ஆசிரியர்!

இன்று சென்னையில், ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருந்தாலும், என் பள்ளி நாட்கள் சோகமானவை தான். முதல் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தேன். வறுமை காரணமாக சரியான சாப்பாடு, உடைகள் இல்லாமல் கஷ்டப்பட்டு படித்தேன்.வறுமையிலும் படிப்பில் நல்ல மார்க் எடுத்து, முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவேன். என் கிழிந்து போன சட்டை, டிரவுசர்களை பார்க்கும் சக மாணவர்கள், 'போஸ்ட் பாக்ஸ்!' என்று கிண்டல் அடிப்பர்.ஒருமுறை சக மாணவர், என் கிழிந்து போன சட்டைக்குள், பேப்பரில் தபால் ரெடி செய்து போடும் போது, எங்கள் கணக்கு ஆசிரியர் பார்த்து விட்டு, அந்த மாணவனை கண்டித்தார். அடுத்த நாள் எனக்கு மூன்று செட் டிரவுசர், சட்டை வாங்கி கொடுத்தார். இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதே போல், கல்விச் சுற்றுலா செல்லவும் எனக்கு பணம் கட்டினார். அந்த காலத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளம்தான் பெற்றனர். அந்த குறைந்த சம்பளத்திலும் எளியோர்க்கு உதவுகின்ற மனிதாபிமானம் என்னை நெகிழ வைத்தது.இன்று நல்ல நிலையில் இருக்கும் நான், என் சொந்த ஊருக்கு போகும்போது அந்த ஆசிரியரை மறக்காமல் போய் பார்ப்பேன். தவிர, நான் படித்த பள்ளியில் என் பிறந்த நாளில் குறைந்தது, ஐந்து ஏழை மாணவர்களுக்கு ஆடைகள் வாங்கி கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளேன். வறுமை எத்தனை கொடியது என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நீங்களும், உங்களால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்!வே.விநாயக மூர்த்தி, வெட்டுவான்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !