அதிமேதாவி அங்குராசு!
கலைவிழா கலக்கல்!தென்னிந்திய சினிமாவில், அதிகமாக பங்களிப்பது, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக நடிகைகள் அதிகம். இதன் பின்னணியில் கேரள அரசு உள்ளது. ஆண்டு தோறும், 'கேரள ஸ்கூல் கலோல்சவம்' என்ற கலைவிழாவை நடத்துகிறது அரசு. இதில் பங்கேற்போரே, திரையுலகில் ஜொலிப்பதாக தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், நடிகர்கள் திலீப், வினீத், நடிகையர் மஞ்சுவாரியார், நவ்யாநாயர், மியா என... பட்டியல் நீள்கிறது. இவர்கள் எல்லாம் பள்ளி நாட்களில் இந்த கலைவிழாவில் பங்கேற்று திறமை காட்டியுள்ளனர்.குரலிசை, நடனம், மிமிக்ரி, மாப்பிள்ளை பாட்டு, தெய்யம் என, நிகழ்ச்சிகள் இடம் பெறும். வட்டார அளவில் துவங்கி, மாநில அளவில் நடைபெறும்; அதிக புள்ளி பெறும் மாவட்டத்துக்கு, 117 பவுன் எடையில் தங்க சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. போட்டியின் போது நடுவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கருதினால், நீதிமன்றத்தில் முறையிட உரிமை உண்டு. இதனால், தகுதி, திறமை அடிப்படையில் நடத்தப்படுகிறது இந்த கலைவிழா. ஆசியாவிலேயே அதிக மாணவ, மாணவியர் பங்கேற்கும் நிகழ்வாக உள்ளது.ஹேய் சிவிங்கி!நிலத்தில் வாழும் உயிரினங்களில் உயரமானது, ஒட்டகசிவிங்கி. ஆப்ரிக்க காடுகளில் வாழும், பாலுாட்டி வகை விலங்கு. அதிகபட்சமாக, 1300 கிலோ வரை எடையுள்ளது. பெண்ணை விட, ஆண் உயரமிக்கது. சரி, உலகிலே மிக உயரமான ஒட்டகசிவிங்கி எது...ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து உயிரியல் பூங்காவில் உள்ள சிவிங்கிதான், மிக உயரமானது. இதற்கு, 'பாரஸ்ட்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.சாதாரணமாக, ஒட்டகசிவிங்கியின் உயரம், 5.5 மீட்டர் வரை இருக்கும். பாரஸ்டின் உயரம், 5.7 மீட்டர். கிட்டத்தட்ட, 19 அடி. உலகின் எல்லா வன உயிரின பூங்காக்களிலும் விவரம் சேகரித்து ஒப்பிட்ட பின்பே நிரூபிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா கண்டம், நியூசிலாந்தில் உள்ள, ஆக்லாந்து பகுதியில், 2007ல் பிறந்தது, பாரஸ்ட். இரண்டு வயதானபோது, குயின்ஸ்லாந்து, வன உயிரினப் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது.காப்பாற்றும் கவசம்!வெடிகுண்டு பரபரப்பு ஏற்படும் இடங்களில், வித்தியாசமான உடை அணிந்த வீரர்களை பார்த்திருப்போம். இதை, 'பாம்ப் ஸ்குவார்ட்' என, ஆங்கிலத்தில் அழைப்பர். தமிழில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழு எனலாம். உயிரை பணயம் வைத்து களத்தில் நிற்பர். அந்த வீரர்கள் அணியும் உடையை, 'பாம்ப் டிஸ்போசல் சூட்' என்பர். களத்தில், எதிர்பாராமல் குண்டு வெடிக்க நேர்ந்தால், கடும் வெப்பம், சிதறும் உலோக துணுக்கை தடுக்கும் திறன் கொண்டது. குண்டு வெடித்தால், கழுத்து, முதுகெலும்பில் சிராய்ப்பு ஏற்படும். அதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த கவச உடை...* தீப்பிடிக்காத துணி வகையில் உருவாக்கப்படிருக்கும்* மிகவும் கெட்டியானது* அணியும் போது, உடல் வெப்பம் அதிகரிக்கும்* குளிரூட்டும் கருவியும், தகவல் பரிமாற பயன்படும் கருவியும் உடையுடன் இணைந்திருக்கும். முதன் முதலில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணுவத்தில் தான், குண்டு செயலிழப்பு குழு உருவாக்கப்பட்டது. இதற்காக பயிற்சி பெற்ற வீரர் குழுவை இரண்டாம் உலகப்போரில் களம் இறங்கியது இங்கிலாந்து. ஆனால், பாதுகாப்பு கவச உடை எதுவும் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது, 'ரோபோ' என்ற இயந்திர மனிதனை பயன்படுத்தி வருகின்றன ராணுவங்கள். வெடி பொருளை முகர்ந்து கண்டுபிடிக்கும் சக்தியுள்ள மோப்ப நாய்கள் பல்லாண்டுகளாக பயன்படுகின்றன. அண்டை நாடான இலங்கையில், ஒரு வகை கீரியை பழக்கி பயன்படுத்தி வருகிறது ராணுவம். நாய் போல், கீரிகளுக்கும் மோப்பத்திறன் அதிகம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.