அதிமேதாவி அங்குராசு!
விசில் தொழில் நுட்பம்!வேகமாக ஓடிக்கொண்டே வாழும் காலம் இது. உணவையும் ஓடி கொண்டே தயாரிக்க வேண்டியிருக்கிறது. சுலபமாக உணவு தயாரிக்க உதவும் கருவி, பிரஷர் குக்கர். இது, இல்லாத சமையலறையே இல்லை எனலாம். இதன் தொழில்நுட்பத்தை பார்ப்போம்... தண்ணீரின் கொதிநிலை, 100 டிகிரி செல்ஷியஸ். கொதிக்கும்போது வெளியறும் நீராவியை முறையாக தடுத்து, 'சீல்' செய்தால், சமைக்கும் பாத்திரத்தின் உட்புறம் அழுத்தம் அதிகமாகும். அதிக அழுத்தத்தில் உணவுப் பொருள் விரைவாக வேகும்; சத்தும், சுவையும் குறையாது. இதுதான், குக்கர் இயக்கத்தின் அடிப்படை.அலுமினிய உலோகத்தால் தயாரான பிரஷர் குக்கர் தான் நீண்டகாலம் பயன்பாட்டில் இருந்தது. கனத்த அலுமினியத் தகடால் உருவாக்கப்பட்டதால் உணவு, தீய்ந்து போகும் அபாயமில்லை. ஆனால், அழுத்தத்தால் சொர சொரப்பாகியது. அமிலத்தன்மையுள்ள உணவு சமைக்கும்போது உலோகம், உணவுடன் கலக்கும் அபாயம் இருந்தது. தற்போது, 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' என்ற துருப்பிடிகாத இரும்பால் தயாரிக்கப்பட்ட, குக்கர் பயன்பாட்டில் உள்ளது. இது பளபளப்பாக இருக்கும்; சுத்தப்படுத்துவதும் சுலபம். மற்றொரு வகை, 'அனடைஸ்ட் அலுமினியம்' என்ற உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது. அலுமினிய தகட்டின் மேல், அலுமினிய ஆக்சைட் பதிப்பதைத் தான், இப்படி குறிப்பிடுகின்றனர். அலுமினியத்தை விட நான்கு மடங்கு உறுதியானது. சூடு வேகமாக பரவும். நீண்ட நேரத்திற்கு, சூட்டை தக்க வைத்துக்கொள்ளும்.பாதுகாப்பான பயன்பாடு!குக்கர் உறுதியாக இருக்க வேண்டும். அதன் மீதான, சீல் சரியாக பொருந்தி இருக்க வேண்டும். அதிகப்படியான அழுத்தத்தை வெளியேற்றும், 'வால்வ்' என்ற பாதுகாப்பு அடைப்பான் முறையாக அமைய வேண்டும். வெப்ப அழுத்தம் இருக்கும் வரை, குக்கரை திறக்க முடியாதவாறு கட்டமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதிக அழுத்தத்தை வெளியேற்றும், பாதுகாப்பு வால்வு, அடைத்துக்கொண்டால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. அழுத்தம் அதிகமாகி வெடித்துவிடலாம். இதை தவிர்க்க, பாதுகாப்பு வால்வு நெகிழ்வான உலோகத்தில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். சில வகை பாதுகாப்பு வால்வு, குறிப்பிட்ட அளவு சூடு பட்டவுடன் உருகும். அந்த வழியாக நீராவி வெளியேறி அழுத்தம் குறைந்துவிடும்.'காஸ்கட் ரிலீஸ் சிஸ்டம்' என்ற அமைப்பு, குக்கர் மூடியில் உள்ளது. இதுவும் அழுத்தத்தை குறைக்கும் பாதுகாப்பு அம்சம்தான். குக்கர் மூடியின் மேற்புறம் உள்ள, 'வெயிட்' அழுத்தத்துக்கு ஏற்ப நகர்ந்து, அதிகப்படியான நீராவியை வெளியேற்றும். இதன் மூலம் உணவுப்பொருள் வெந்த நிலையையும் அறியலாம்.பிரஷர் குக்கர் வாங்கும் போது...* பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ளவும்* ஐ.எஸ்.ஐ., தர முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாக என பார்க்கவும்* குடும்பத்தின் அளவு மற்றும் தேவையை நிறைவேற்றுமா என கணித்து தேர்ந்தெடுக்கவும்* அடிப்புறம் மூன்று அடுக்கு கனம் கொண்டதா என பார்க்க வேண்டும்.வெப்பத்தை தாங்கும் தரமான கைப்பிடி இருக்கிறதா என கவனிக்க வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டால், சமையல் சுலபமாகும்; உணவு சுவையாகும். மீன் வளர்ப்பு!வளர்ப்பு உயிரினங்களில் பெரும்பாலானோரை கவர்வது மீன். எளிதாக வளர்க்கலாம். அழகிய தொட்டியில் துள்ளி விளையாடும். வண்ண மீன்கள் கவனத்தை ஈர்க்கும். பிற வளர்ப்பு பிராணிகளை போல கொஞ்ச முடியாது. ஆனால், கண்ணாடிக்கு வெளியே கொஞ்சினால், நீந்தும் மீன்கள் புரிந்து கொள்வதாக, ஒரு ஆய்வு கூறுகிறது.அலங்கார மீன் வளர்ப்புக்கு கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்.மீன் தொட்டிகளை...* வீட்டின் வரவேற்பு அறையில் வைப்பது சிறப்பானது* வீட்டின் முன் பகுதியையும் பயன்படுத்தலாம்* தொந்தரவு தராத இடமாக இருக்க வேண்டும். கிழக்காசிய நாடான ஜப்பான் குடும்பங்களில், முன் அறையில் வண்ண மீன் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வழக்கம் உலக நாடுகளில் பரவி உள்ளது. அலங்கார தொட்டிகளில் வளர்க்க, சில ரக மீன்களையும் பரிந்துரைத்துள்ளனர் ஜப்பானியர். அவை, ரெகுலர் கோல்டு, ரெட்கேப் கோல்டு, ஒரண்டா கோல்டு, சிங்கத்தலை கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு, சில்வர் மாலி, மற்றும் ஏஞ்சல் ரக மீன்கள். இவை உலக அளவில், பிரபலமாக உள்ளன.வாஸ்து மீன்களாக கருதப்படும், புளோரா மற்றும் அரவானா விலை மிக அதிகம். அவற்றுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய வண்ண மீன் ரகங்களில் மாலிஸ், கோல்டு பிஷ், ஏஞ்சல், டெட்ராஸ், கப்பீஸ் பார்ஸ், பைட்டர் மற்றும் ரான்சூ கோல்டு பிஷ் ஆகியவை பிரபலமாக உள்ளன.அறைகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கிடைக்கின்றன. வைட்டமின் உணவுகள், பதப்படுத்தப்பட்ட புழு போன்றவற்றை, தினமும் இரண்டு முறை அளித்தால் போதும். உணவு அதிகமாக போட்டால் உற்சாகமாக சாப்பிடும். ஆனால், செரிமானம் ஆகாமல் இறந்து விடவும் வாய்ப்பு உண்டு.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.