உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

புவிசார் குறியீடு !காஞ்சிபுரம் பட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகை உள்ளிட்டவை அந்தந்த பகுதி சார்ந்த உற்பத்தி பொருட்கள். இந்த அடையாளத்தை உறுதி செய்து சான்றளிப்பதைத் தான், புவிசார் குறியீடு என்கின்றனர். இந்த தரக் குறியீடு பெற்ற பொருளை, வேறு ஊரில் உற்பத்தி செய்து, காஞ்சிபுரத்தில் நெய்ததாக விற்க முடியாது. மதுரையை சுற்றி சாகுபடியாகும் குண்டுமல்லியை மட்டுமே, மதுரை மல்லி என உரிமையுடன் விற்க முடியும்.இதற்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு தான் புவிச்சார் குறியீடு. உற்பத்திக்கு அங்கீகாரமாக அமைந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள், புவிசார் குறியீடு சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்தலாம். இந்தியாவும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடாக உள்ளது. அதன்படி, 1999 இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 2003ல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. தமிழகத்தில் புவிசார் குறியீடு சட்டப்படி, 35 பொருட்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், பண்ருட்டி - பலா, பழநி - பஞ்சாமிர்தம் ஆகியவையும் அடங்கும்.புவிசார் குறியீட்டு உரிமையை தனி ஒருவரால் வாங்க முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு, அந்தந்த பகுதியில் பதிவு செய்துள்ள உற்பத்தியாளர் அமைப்புகளே வாங்க முடியும். புவிசார் குறியீடு பதிவுக்கு விண்ணப்பிக்கும் அமைப்பு, அது தொடர்பான உற்பத்தியாளர் நலனை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். புவிசார் குறியீடு, உற்பத்தி இடம், வேளாண் பொருட்களின் உற்பத்தி, கைவினை பொருட்கள் என பல பிரிவுகளில் வகைப்படுத்தி குறியீடு செய்து வழங்கப்படுகிறது. இதை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் மையம், சென்னையிலும் உள்ளது. மத்திய அரசின் தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, புவிசார் குறியீட்டு சான்றிதழை வழங்குகிறது. நலம் மிக்கத்தீவுஉலகமே கொரோனா பெருந்தொற்றின் பிடியில் திணறி, மெல்ல விடுபட துவங்கியுள்ளது. இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி, இயல்பு வாழ்க்கை தொடர்கிறது.இங்கு, முக கவசம், கிருமி நாசினி என எதுவும் பயன்படுத்துவதில்லை. உணவகம், சுற்றுலா தலங்கள், பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன. திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை.இங்கு ஒருவர் கூட, கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படவில்லை. இதற்கு, யூனியன் பிரதேச நிர்வாகம் கடைப்பிடிக்கும், கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குறித்த தகவல், கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான உடனேயே, இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், லட்சத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.பின், அரசு அதிகாரி, பொதுமக்கள் என யாராக இருந்தாலும், லட்சத்தீவுகளுக்குள் வர வேண்டுமானால், கேரள மாநிலம், கொச்சி அரசு மருத்துவமனையில், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.தொற்று இல்லை என்று உறுதி செய்த பின்னரே, லட்சத்தீவுகளின் தலைநகர் கவரட்டிக்கு அழைத்து வரப்படுவர்.அங்கு, மீண்டும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். பின், மீண்டும் பரிசோதனை செய்து, தொற்று இல்லை என உறுதி செய்த பின்பே, ஊருக்குள் அனுமதிப்பர்.இவ்வளவு முன்னெச்சரிக்கை நடைமுறைகள் இருப்பதால் தான், இங்கு ஒருவருக்கு கூட இதுவரை தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. நலமிக்க இந்திய தீவு.செய்யக்கூடாதவை!பழம் சாப்பிட்டதும் தண்ணீர் பருக கூடாது. பழங்களில் வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன. அவற்றை பற்களால் கூழாக்கி உண்பதால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். உடனே தண்ணீர் பருகினால், சத்துக்கள் வெளியேறிவிடும். எனவே, பழம் சாப்பிட்டதும், 20 நிமிடங்கள் தண்ணீர் பருக வேண்டாம். எப்போது தண்ணீர் பருகுவதற்கு உள்ளக் கட்டுபாட்டை உணருங்கள்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !