அதிமேதாவி அங்குராசு!
தவக்களை புராணம்!மழை பெய்த உடன், கொட்ட கொட்ட விழித்து, 'கரக் முரக்' என ஒலி எழுப்பி வந்து விடும் தவளை. தவளையும், தேரையும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. தவளையால் ஈரப்பதம் இல்லாமல் வாழ முடியாது. ஆனால் ஈரம் இல்லாத இடத்திலும் தாக்குப்பிடிக்கும் தேரை. இந்த உயிரினம் பற்றி தெரிந்து கொள்வோம்...தவளை இரு வாழ்வி உயிரினம்; குளிர் ரத்த பிராணி. உலகில், 7370 வகை இனங்கள் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அண்டார்டிகா தவிர, அனைத்து பகுதியிலும் வாழ்கிறது.தவளை நீரில் முட்டை இடும்; அது கூட்டாக ஒட்டியிருக்கும். முட்டையில் இருந்து வெளிவருவது, தலைப்பிரட்டை. இதற்கு நுரையீரல் கிடையாது; செவில்களால் சுவாசிக்கும். நுரையீரல் வளர்ந்த பின் தவளையாக மாறும்.தவளை, தண்ணீர் குடிக்காமல் உயிர்வாழும். தண்ணீரில் வசிக்கும்போது, இதன் தோல் தேவையான ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்ளும். மூக்கால் மட்டுமல்லாது, தோல் மூலமும் சுவாசிக்கும். தோல் ஈரப்பதத்தை இழந்தால் இறந்துபோகும்.ஆண் தவளை, தாடையின் கீழ் உள்ள பை போன்ற அமைப்பை, பலுான் போல ஊதி பெருக்கி, ஒலியெழுப்பி இணையை ஈர்க்கும். அப்போது, வாயைத் திறப்பதில்லை. கரகரப்பான ஒலியெழுப்பி மற்ற தவளையுடன் தொடர்பு கொள்ளும். இந்த ஒலி, 'கிராக்' எனப்படுகிறது. இனப் பெருக்கத்திற்காக மட்டும் குரல் எழுப்புவதில்லை. இரை, ஆபத்து கால எச்சரிக்கை, பாதுகாப்பு போன்ற, 20 செயல்களுக்காக ஒலி எழுப்பி தகவல் பரிமாறிக் கொள்ளும்.நாக்கில் உள்ள ஒட்டும் பசை உதவியால் இரைகளைப் பிடித்து உண்ணும். பூச்சிகள் தான் மிக முக்கிய உணவு. இரையை விழுங்க, அதன் கண்களும் உதவுகின்றன. கண்மணிகளை கீழ்நோக்கி உருட்டுவதன் மூலம் இரையை தொண்டைக்குள் தள்ளிவிடும்.தவளையின் கண்கள், 360 டிகிரி கோணத்திற்கு சுழலும் திறன் கொண்டது. இதுவே, உணவு தேடவும், ஆபத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.குளிர்காலத்தில் அசைவற்று உடல் செயல்களை நிறுத்தி, மாதக் கணக்கில் துாங்கும். அப்போது, அதன் உடலில், 65 சதவீதம் ரத்தம் உறைந்து விடுவதாக, அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சில இனங்கள் மட்டும் குளிர் குறைந்த இடம் நோக்கி பெயரும்.தேரையால் நீர்வளம் குறைந்த பாறை பகுதியிலும் வாழ முடியும். துள்ளிக்குதிக்காமல், மெதுவாக நடந்தே பயணிக்கும். இதன் கண்களுக்குப் பின் பகுதியில் விஷச்சுரப்பிகள் உள்ளன. தவளை, நான்கு முதல், 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். உலகில் மிகப்பெரியது, கோலியாத் தவளை; இரண்டு அடி நீளமும், நான்கு கிலோ எடையும் இருக்கும். உருவில் மிகச் சிறியது, 'பில்லோபேட்ஸ் டெர்ரிபில்லிஸ்' எனப்படும் பொன்னிறத் தவளை. இது, விஷம் மிக்க இனம். பாம்பு, முதலை, பறவைகள், முள்ளெலி என பல உயிரினங்கள், தவளையை இரையாக கொள்கின்றன. நீருக்குள், சில மீன் இனங்கள், நீந்தும் பாலுாட்டிகள், நீர்மூழ்கி பறவைகளும் தவளையை வேட்டையாடும். அதிகம் பசித்தால், சிறு தவளையை, பெரியவை உண்பதும் உண்டு. மனிதனும், தவளைக்கு முக்கிய எதிரிதான். சுற்றுச்சூழலில் மாறுபாடு ஏற்படுத்துவதால் அழிகிறது தவளை இனம். மனிதன் என்ற பெரிய உயிரின வளர்ச்சியால், மற்ற உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகிறது. குழந்தைகளே... பல்லுயிரினங்களையும் உலகில் பேணுவோம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு