உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

முஸ்தபா கமால் பாட்சா! மத்திய கிழக்கு நாடான துருக்கியின் தந்தை என போற்றப்படுபவர், முஸ்தபா கமால் பாட்சா.இவரது தியாகத்தை போற்றி, அந்த நாட்டில், 300க்கும் மேற்பட்ட சிலைகள் அமைத்து கவுரவித்துள்ளனர் மக்கள்.ஐரோப்பாவின் நோயாளி என அழைக்கப்பட்டது துருக்கி. இங்கு, 1881ல் பிறந்தார், கமால் பாட்சா. அப்போது, அந்த நாட்டில், கலவரம், கொந்தளிப்பு, வறுமை நிறைந்திருந்தது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்திருந்தது; அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர் மக்கள்.ராணுவப் பள்ளியில் படித்தார், கமால் பாட்சா. புரட்சி கருத்துகளை கொண்ட, 'வாதான் சங்கம்' என்ற இளைஞர் அமைப்பில் சேர்ந்தார்; பல போராட்டங்களில் பங்கேற்றார். அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டார். உளவாளிகள் மூலம் இதை அறிந்தது அரசு. முஸ்தபாவை கைது செய்து, சிறையில் அடைத்தது. விடுவிக்கப்பட்ட பின், 'ஐக்கிய முன்னேற்றக் குழு' என்ற புரட்சி அமைப்பை துவங்கினார். தலைமறைவாக இருந்தபடியே போராட்டங்கள் நடத்தி வந்தார் கமால் பாட்சா.துருக்கியில், ராணுவத்துடன் தீவிரமாக மோதியது இளைஞர் படை. தாக்குப்பிடிக்க முடியாத ராணுவம் பின் வாங்கியது. அப்போதைய துருக்கி மன்னர் அப்துல் ஹமீதை பதவி நீக்கம் செய்து, சிறை பிடித்தது இளைஞர் படை.இந்நிகழ்விற்கு பின், மன்னராக ஐந்தாம் முகம்மது பொறுப்பேற்றார். ராணுவத்துக்கும், புரட்சி படைக்கும் மோதல் ஆங்காங்கே நடந்தது. இந்நிலையில், அண்டை நாடுகளும், துருக்கியை அபகரிக்க முயன்றன.கமால் பாட்சா தலைமையிலான புரட்சி படை, அண்டை நாட்டு படைகளை விரட்டியடித்தது.இவ்வாறு நடந்த போர் ஒன்றில், படுகாயம் அடைந்த கமால் பாட்சா, சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி கூட்டு சேர்ந்து, துருக்கி மீது படையெடுத்தன. துருக்கியை பங்கு போடவும் திட்டமிட்டன. சிகிச்சை பெற்று திரும்பிய கமால் பாட்சா மீண்டும் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரை சிறையிலடைக்க, பிரிட்டிஷ் படை உதவியுடன் பெருமுயற்சி செய்தார் துருக்கி மன்னர்.அது பலன் தரவில்லை.போராட்ட முடிவில், துருக்கி நாடாளுமன்றம், கமால் பாட்சாவிடம் அதிகாரங்களை வழங்கியது; நாட்டின் மிக உயர்ந்த, 'காஜி' என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. துருக்கியில், கலீபாவாக செயல்பட்டு வந்த, அப்துல் மஜீத் அதிகாரம் பறிக்கப்பட்டது. மத சார்பிலான மன்னராட்சி ஒழிந்தது. இதற்கிடையே, ஒரு பிரிவினர் கமால் பாட்சாவை கலீபா ஆக்க முயற்சித்தனர். ஆனால், மதம் வேறு, அரசியல் நிர்வாகம் வேறு என, அதை ஏற்க மறுத்து விட்டார், கமால் பாட்சா.மதத்திற்கு முன்னுரிமை தர மறுக்கிறார் என எதிர்ப்பு கிளம்பியது. அதை முறியடித்தார்.பின், இஸ்மத் பாட்சா என்பவர் தலைமையில் புதிய அமைச்சரவையை உருவாக்கினார் கமால் பாட்சா. நாட்டில், கலவரம் செய்த கட்சிகளுக்கு தடை விதித்தார். எதிர்கட்சியே இல்லை என்ற நிலையை உருவாக்கினார்.அவரை தீர்த்துக் கட்ட ரகசிய இயக்கம் ஒன்று முயன்றது. ஸ்மிர்னா நகரில் நடந்த ஊர்வலத்தில் கமால் பாட்சா பங்கேற்றார்; அதில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதிசயமாக உயிர் தப்பினார் கமால் பாட்சா. எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் நாட்டில் சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார்.அவற்றில் சில... * திருமணம் செய்யும் முன், ஆணும், பெண்ணும் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்* மதப் பிரசாரப் பள்ளிகளை அரசே கண்காணிக்கும் * பள்ளிகளில், துருக்கியே பாட மொழி* நாட்டில் துவங்கும் அடிப்படை தொழில்களில், துருக்கியர் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.இவை உட்பட, பல சீர்திருத்தங்கள் செய்தார்.துருக்கி அரசியலமைப்பை, 'மக்கள் குடியரசு' என மாற்றினார். நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற கமால் பாட்சாவுக்கு, 'ஆட்டா துர்க்' என்ற பட்டத்தை, துருக்கி நாடாளுமன்றம் வழங்கியது. இதற்கு, 'துருக்கியின் தந்தை' என பொருள். அவர், நவம்பர் ௧௦, 1938ல், 57ம் வயதில் காலமானார். அவர் வகுத்த மக்களாட்சி பாதையில், கம்பீரமாக நடை போடுகிறது, துருக்கி நாடு.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !