சவால்!
வானச்சூர் என்ற காட்டில், புலி ஒன்று வசித்து வந்தது.ஒரு நாள் புலிக்கு, கொழுத்த வேட்டை. விருப்பமான காட்டெருமையை வேட்டையாடி, வயிறு புடைக்க தின்றது.அதற்கு தண்ணீர் தாகம் எடுத்ததும், குளத்தை நோக்கிச் சென்றது.அந்த குளத்தில், பன்றிக்குட்டி ஒன்று நீர் அருந்திக்கொண்டிருந்தது.அதைப் பார்த்த புலி, 'கர்...' என உறுமியது. பயந்த பன்றிக்குட்டி, மெதுவாக பின் வாங்கியது.பின், நீர் அருந்தச் சென்றது புலி. குளத்து நீரில், லேசான துர்நாற்றம் வீசியது. தண்ணீர் குடிப்பதை தவிர்த்து முகம் சுளித்த புலி, வேறு குளத்தை நோக்கிச் சென்றது. பன்றிக்கு, காரணம் புரியவில்லை. பலவாறாக யோசித்தது. கடைசியில், 'என்னைக் கண்டு பயந்து தான், புலி சென்று விட்டது' என நினைத்தது. அதற்கு யானை போன்று பலம் வந்து விட்டதாக நினைப்பு. உடனே, புலியை நோக்கி ஓடியது.'என்னைப் போல, பலசாலி யாரும் இல்லை; என்னுடன் சண்டைக்கு வா...'மார் தட்டி வம்புக்கு இழுத்தது பன்றிக்குட்டி.அப்போது தான் இரை தின்றிருந்ததால், 'நண்பா... இன்று சண்டை வேண்டாம்; நாளைக்கு வைத்துக் கொள்வோம்...' என்றது புலி.அதைக் கேட்டதும், பன்றிக்குட்டிக்கு கர்வம் வந்து விட்டது. தப்பிப்பதற்காகவே, புலி இதுபோல் கூறுவதாக எண்ணியது. இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, வீட்டிற்கு ஓடியது.குடும்பத்தினரிடம் புலிக்கு சவால் விட்டதை பெருமையாக கூறியது.அதைக் கேட்டதும், 'ஐயோ... இதென்ன விபரீதம்! இந்த பன்றிக்குட்டிக்கு புத்தி எங்கே போனது. முட்டாள் தனமாக செய்த காரியம் எங்கே போய் முடியப் போகிறதோ...' என புலம்பின பன்றிகள்.புலியிடம் சவால் விட்டதால் ஏற்படப் போகும் அபாயத்தை உணர்த்தியது தாய்ப்பன்றி. அப்போது தான் பன்றிக்குட்டிக்கு, தவறு புரிந்தது. அதிலிருந்து தப்ப ஆலோசனைக் கேட்டது.நிதானமாக, 'நீ கூறிய மாதிரியே, நாளை புலியிடம் சண்டை போடு! இல்லையென்றால் நம் குடும்பத்தையே அழித்து விடும்... அதேநேரம், நான் கூறும் உபாயத்தையும் கடைபிடி. புலியை சந்திக்க செல்லும் முன், சேற்றிலும், சகதியிலும் நன்றாக உருண்டு புரளு! உடலில் துர்நாற்றம் வீசும். அதன்பின், நடப்பது போல் நடக்கட்டும்...' என்று அறிவுரை கூறியது மூத்த பன்றி.மறுநாள் -சேற்றிலும், சகதியிலும் புரண்டு, புலியுடன் சண்டைக்குப் புறப்பட்டது பன்றிக்குட்டி.சண்டையைப் பார்க்க, காட்டு விலங்குகள் கூடியிருந்தன.பன்றிக்குட்டி அருகில் சென்றது புலி. ஆனால், துர்நாற்றத்தால் பின் வாங்கியது.பன்றிக்குட்டியோ, 'உங்களுடன் சண்டைக்கு வந்திருக்கிறேன்...' என எழுந்து நின்றது.துர்நாற்றம், புலிக்கு கடும் எரிச்சலை தந்தது. அதனால், 'உடனே இங்கிருந்து போய் விடு...' என உறுமியது.பின், பன்றிக்குட்டி அங்கு நிற்குமா என்ன... பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடித்தது.இதன் பின்தான், சாக்கடை, சேறு சகதியில் உருண்டு புரள்வதை வழக்கமாக்கி கொண்டது பன்றிஇனம்.குழந்தைகளே... முதியவர்களின் அறிவுரை, தக்க சமயத்தில் உதவும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.