உள்ளூர் செய்திகள்

சிறுவர் மலர்! ரசிகனாக்கும்!

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பட்டதாரி சின்மயானந்தம். சொந்தத் தொழிலே சிறந்தது என்று கோழிக்கறி வியாபாரம் செய்கிறார். மனைவி வனிதா; யாழினி, அமிழ்தினி என்ற இரண்டு மகள்கள் உண்டு.இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரானவர். இதனால், இவரது கடையில் கோழிக்கறி வாங்க வருபவர்கள் பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் பாத்திரம் மற்றும் துணிப்பையோடு வந்தால், அவர்களுக்கு இரண்டு முட்டை இலவசமாக தந்து பாத்திரம், துணிப்பை பயன்பாட்டை அதிகரிக்கச்செய்கிறார்.எட்டாவது படிக்கும் போது தினமலர் - சிறுவர் மலர் இவருக்கு அறிமுகமானது. அப்போது முதல் சிறுவர்மலர் இதழின் பரமரசிகர். தான் படிப்பது மட்டுமில்லாமல் தன் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களையும் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார்.'என்.எஸ்.கே., சிந்தனைப் பேரவை' என்ற அமைப்பின் செயலாளராக உள்ளார். தலைவர் பா.பரமானந்தம். இந்த அமைப்பின் நோக்கம் பள்ளிப்பிள்ளைகளை பொது மேடையில் தயக்கமின்றி பேசவைப்பது, சிந்திக்கவைப்பது, பொதுஅறிவை வளர்ப்பதும்தான். இதற்காக மாதத்தின் நான்காவது சனிக்கிழமையன்று அந்தப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில், மாலை நேரக்கூட்டம் நடத்துகிறார்.இந்தக்கூட்டத்தில் பள்ளிக்குழந்தைகள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இவர்களுக்கு வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்படும். வினாடி வினா போட்டிகளில் பெரும்பாலான கேள்விகள் சிறுவர் மலர் இதழில் இருந்துதான் கேட்கப்படும். பேச்சுப்போட்டியும், பயிற்சியும் மழைநீர் சேகரிப்பு, மரம்நடுதல், நாட்டுப்பற்று, சுற்றுச் சூழல் போன்ற தலைப்புகளில் அமையும்.ஐம்பதிற்கும் அதிகமான பேர் பங்கேற்கும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற பாகுபடின்றி அனைவருக்கும் சிறுவர்மலர் இதழ் பரிசாக வழங்கப் படும். ஒவ்வொரு மாதமும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.'சிறுவர் மலர் ஒரு அறிவுக் களஞ்சியம். அதுவும் இப்போது புது மெருகோடு, நிறைய புதுமைகளோடு வருகிறது. நான் செய்வது எல்லாம் சிறுவர் மலர் இதழை புதுப்புது குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதுதான்' என்று சந்தோஷமாக சொல்கிறார். இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். எண்:9245328186.இந்த காலத்தில் தான், தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று சுயநலத்தோடு வாழும் மக்கள் மத்தியில் பொதுச்சேவை செய்து மாணவர்கள் மனதில் நல்லதை விதைக்கும் சின்மயானந்தா போன்ற இளைஞர்கள் நம் நாட்டிற்குத் தேவை!ஹாட்ஸ் ஆப் சின்மயா!- எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !