விபத்து தடுப்பு கோடு!
சாலைகளில் நீண்ட பயணம் மயக்கும். தொந்தரவு இல்லாமல் போய் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், கவனமும், பாதுகாப்பும் முக்கியம்.தேசிய நெடுஞ்சாலையைக் கடப்போர் மீது, வேகமாக வரும் வாகனம் மோதி விபத்து ஏற்படுவது உலகளவில் தீராத பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் அதிகம். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் இதற்கு தீர்வு கண்டுள்ளனர். சாலையைக் கடக்கும் இடங்களில், கறுப்பு, வெள்ளை பட்டை கோடுகளை, 'த்ரீடி' என்ற முப்பரிமாணத்தில் வரைகின்றனர். அது சற்று மேடாக எழும்பி நிற்பதுபோல் தோன்றும். அதன் மீது, நடப்போர் அந்தரத்தில் செல்வது போல் காட்டும். இதை காணும் வாகன ஓட்டிகள், குழப்பத்தில் துாரத்தில் வண்டியை நிறுத்தி விடுவர். இதனால் விபத்துகள் குறைந்துள்ளன. இங்குள்ள, பாங்காக் புறநகர் பகுதியில் பள்ளிகள் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இந்த முப்பரிமாண வரிக்குதிரை கோடுகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. விதிகளை கடைபிடித்து, சாலையைக் கடக்க பழகுவோம். அது, விபத்துக்களை தடுக்கும்.