விடியல்!
புளியம்பட்டி கிராமத்தில் பசுக்கள் அதிகம். அவை தினமும் மேய்ச்சலுக்கு சென்று மாலையில் திரும்பும். ஒருநாள் -கன்றுக்குட்டியுடன் மேய்ந்து, வெகுநேரத்துக்கு பின் தொழுவத்திற்கு திரும்பியது வெள்ளை பசு. உண்டதை அசை போட்டபடி அவை பேசிக் கொண்டிருந்தன. அருகே சென்ற செல்லப்பிராணி நாய், 'என்ன இது, ஒரே சத்தமா இருக்கு... துாங்க மாட்டிங்களா...' என்றது.'உனக்கென்னப்பா... முதலாளி, தினமும் ருசியா சாப்பாடு போடுறாரு; நாங்க தான் உணவு கிடைக்காம திண்டாடுறோம்...' என்றது பசு. பதைபதைப்புடன், 'என்னாச்சு... இவ்ளோ கவலையா பேசுறீங்களே...' என்றது நாய். 'தினமும் வெளியே செல்கிறோம்; ஆனா புல் பூண்டு கண்ணில் பட மாட்டேங்குது. எல்லா இடத்திலயும் கட்டடம்; எங்க பாத்தாலும் மனிதர்கள் போடுற பிளாஸ்டிக் பை தான் இருக்கு... 'போன வாரம் கூட, நம்ம தொழுவத்துல ஒரு பசு, இட்லி இருக்குதுனு பிளாஸ்டிக் பையை சேர்த்து சாப்பிட்டது... அது குடலில் மாட்டி இறந்திடுச்சு; மிச்ச மீதி உணவை பிளாஸ்டிக் பையில கட்டி போடுறதால தான், இது போல ஆகுது...'அது மட்டுமா... நல்லாதான் பால் கொடுக்கிறேன்; அதுவும் போதாதுன்னு, ஊசி போட்டு கறக்கறாங்க; அந்த பாலை குடித்தால் வியாதி வரும்... இது தெரியாம, பசும்பால் குடிச்சா கெட்டதுன்னு நினைச்சுக்கிறாங்க...'எது சரி, தவறென உணர முடியாத வரைக்கும், மனுஷனுக்கு நல்வாழ்வு என்பது கேள்விக்குறி தான். நீ போய், காவல் பணியைப் பாரு...' என்றபடி உறங்க சென்றது பசு.செல்லங்களே... சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை முறைப்படி அகற்ற பழக வேண்டும். - ந.மோகன்ராஜ்