கரைந்தது கள்ள மனம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஆயக்குடி பள்ளியில், 1980ல், 9ம் வகுப்பு படித்தபோது, வரலாறு ஆசிரியர் பிச்சைக்கண்ணு, சிறப்பாக பாடம் எடுத்தார். மிகவும் கண்டிப்பானவர்; மாணவர்களை, மிகச்சரியாக வழி நடத்துவார்.அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. திருத்திய விடைத்தாள்கள் வந்தன. எல்லா பாடங்களிலும், 70க்கும் அதிகமாக பெற்றிருந்தேன்; வரலாறு பாடத்தில் மட்டும், 30 மதிப்பெண்கள்.அந்த விடைத்தாளை திருப்பித் திருப்பி பார்த்தேன், வரைபடத்தில் எதையும் குறிக்காமல் விட்டிருந்தேன். ஐந்து மதிப்பெண்கள் அதற்கு உண்டு. உள்ளிருந்த கள்ள மனம் மெல்ல எட்டிப்பார்த்தது. அவசரமாக புத்தகத்தை புரட்டி, வரைபடத்தில் விடைக்கு உரிய இடங்களை காப்பியடித்தேன். பின், 'ஐயா... வரைப்படத்தை திருத்தாமல் விட்டுள்ளீர்கள். திருத்தி, உரிய மதிப்பெண் கொடுங்கள்...' என்றேன்.விடைத்தாளை வாங்கி புரட்டிப் பார்த்தார். திடீர் என, கன்னத்தில் அறைந்து, 'பொய் பேசலாமா...' என்றார். கள்ள மனம் கரைந்தது. கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டேன். அறிவுரைகள் கூறி, 'வரைப்படத்தின் மேல் நான் எழுதியுள்ளதை கவனிக்கவில்லையா...' என்றார். ஆனாலும், ஐந்து மதிப்பெண்கள் போட்டார். இது, மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. முயற்சி எடுத்து, மாலையில் கூடுதல் நேரம் பயிற்சி எடுத்தேன். அடுத்த தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றேன். எனக்கு, 56 வயதாகிறது; அரசுப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகிறேன். இந்த வாழ்க்கையை அமைத்து தந்த ஆசானை, மனதில் கொண்டு, கற்பித்து வருகிறேன்.- அ.சிவராஜ், பழனி.தொடர்புக்கு: 86100 91558