முருங்கை பூக்கள்!
கோவை பட்டணத்தில் ஆரஞ்சு குடியிருப்பு அமைந்திருந்தது. அங்குள்ள தேவி இல்லத்தின் பின் பக்கம், முருங்கை மரம் ஒன்று நின்றது; அது மாடிவரை படர்ந்திருந்தது; பூக்களால் குலுங்கியது.காலை நேரம் - வீட்டின் மாடிக்கு வந்தான் ஸ்டீபன். அழகுடன் குலுங்கிய முருங்கை பூக்களை ரசித்துக் கொண்டிருந்தான். அந்த பக்கம் அவன் தங்கைகள் ஷீபாவும், கிருபாவும் வந்தனர். அவர்களும் அதை ரசித்தனர்.''என்ன அழகான பூக்கள்... கண்கொள்ள காட்சி...'' என்றாள் மூத்த தங்கை ஷீபா.''வெண்மையும் வெளிர் பசுமையும், மஞ்சளும் கலந்த வண்ணத்தில் மிளிர்கிறதே...'' என்றாள் சின்ன தங்கை கிருபா.''நீங்க முருங்கை பூவை மட்டும்தான் பார்க்கிறீர்கள்... பூவில், தேன் உறிஞ்சும் சின்ன சிட்டை பாருங்க... எவ்வளவு நேர்த்தியாக, கூரிய அலகை பயன்படுத்துகிறது...'' என்றான் அண்ணன்.கூர்ந்து பார்த்து தலையாட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.''அதோ... அந்த கிளையைப் பாருங்க... வண்ணத்து பூச்சிகள், தேனீக்கள், வண்டுகள் எல்லாம், பூவை சேதப்படுத்தாமல், நுட்பமாக தேன் உறிஞ்சுகின்றனவே...'' என்றாள் ஷீபா.அப்போது, ஒரு கிளையில், குடுகுடு என ஓடியது அணில். முருங்கை பூக்களை வாயால் கவ்வி, முன்னங்கால்களால் பற்றி கொறித்தது. தேன் உறிஞ்சிய வண்டை, கிளையில் பதுங்கியிருந்த ஓணான் கண்காணித்தது. திடீர் என நாக்கை நீட்டி, 'லபக்' என பிடித்தது.இதைக் கண்டதும், ''பாவம் அண்ணா... அந்த வண்டு...'' என்றாள் கிருபா.''ஆமாம்... இது தான், இயற்கையின் விதி; மனித வாழ்க்கையும், இந்த முருங்கை மரம் போல தான்; நல்லதும், கெட்டதும் உண்டு... நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்...'' என்றான். ''சரியாக கூறினாய் அண்ணா...'' என்றாள் சின்ன தங்கை. மூவரும் மகிழ்ந்து விளையாடினர்.குழந்தைகளே... நம்மை சுற்றியுள்ள இயற்கையை மகிழ்ச்சியுடன் கவனித்து வாழுங்கள். அது நல்ல படிப்பினை தரும்.- எஸ்.டேனியல்