உள்ளூர் செய்திகள்

அவசரப்புத்தி!

மன்னன் செங்கிஸ்கான் கடுங் கோபக்காரன்.பருந்து ஒன்றை செல்ல பிராணியாக, மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தான்.பருந்தும், அவன் கட்டளைகளை ஏற்று மிகுந்த பணிவு காட்டியது.அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றை கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தான் செங்கிஸ்கான். அதனால், பருந்தும் அவனுடன் பயணித்து வந்தது.ஒரு நாள் -நண்பர்களுடன், வேட்டைக்கு புறப்பட்டான் செங்கிஸ்கான்.அனைவரும், கத்தி, ஈட்டி, வில், அம்புடன் வந்தனர்.செங்கிஸ்கான் மட்டும் செல்லப் பருந்துடன் சென்றான். நண்பர்களிடம், 'என் பருந்து, 1000 வாளுக்கு சமம்...' என கர்வத்துடன் கூறினான்.வெள்ளிக் குல்லா அணிந்து கம்பீரமாக காட்சி தந்தது பருந்து. செங்கிஸ்கானுடன் குதிரை மீது அமர்ந்து தான் பயணிக்கும்.ஏதாவது தேவையென்றால், அந்த குல்லாவை கழற்றி, பருந்தின் காதில் ஆணையிடுவான். தாமதமின்றி அதை நிறைவேற்றும் பருந்து.அன்று வேட்டை களத்தில், 'விலங்குகள் எங்கு இருக்கின்றன' என்பதை தெரிந்து கொள்ள விரும்பினான். பருந்துக்கு அணிவித்திருந்த வெள்ளிக் குல்லாவை கழற்றி, காதில் கூறினான். பறந்தபடி கவனித்து, விலங்குகள் உலாவும் இடத்தை அடையாளம் காட்டியது பருந்து.மகிழ்ச்சியடைந்த செங்கிஸ்கான் வேட்டையைத் துவங்கினான்.பின், நண்பர்களிடமிருந்து பிரிந்து, வேறு திசைக்கு சென்றான்.பருந்து மட்டும் வானில் பறந்தபடி, வேட்டைக்கு உதவியது. வேட்டையாடிய களைப்பில், தீராத தாகத்துடன் தண்ணீரை தேடி, அங்கும் இங்கும் அலைந்தான் செங்கிஸ்கான்.ஒரு மலைப் பாறையில், தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பருந்தின் தலையில் அணிவித்திருந்த வெள்ளி குல்லாவைக் கழட்டி, தண்ணீரை பிடித்தான்.கணம் நேரமும் தாமதிக்காமல், அந்த தண்ணீரைத் தட்டி விட்டது பருந்து. தாகத்தில் தவித்தவனுக்கு, பருந்தின் செயல் வியப்பாக இருந்தது.மீண்டும், அதில் தண்ணீரை பிடித்தான் செங்கிஸ்கான்.பருகும் நேரத்தில் அதையும் தட்டி கவிழ்த்தது பருந்து.கடும் கோபத்துடன், 'இந்த செயலை, என் அமைச்சர் யாராவது செய்திருந்தால், தலையை கொய்திருப்பேன்; ஆனால், நீ என் செல்லப்பிராணி என்பதால் மன்னித்து விடுகிறேன்; இனி, ஒரு முறை இப்படி செய்தால், ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...' என்றான்.பருந்தை முறைத்தப்படி, மீண்டும் வெள்ளி குல்லாவில் தண்ணீரை பிடித்தான் செங்கிஸ்கான்.தண்ணீரை அருந்த முயன்ற போது, மீண்டும் தட்டிவிட்டது பருந்து.வாளை எடுத்து வீசினான் செங்கிஸ்கான். அவ்வளவு தான். அந்த இடத்திலேயே, வெட்டுண்டு மடிந்தது பருந்து.குல்லாவில் பிடித்திருந்த தண்ணீரும் கொட்டியது. அதன்பின், அந்த ஊற்றில் தண்ணீர் வரவில்லை.ஊற்று பாய்ந்த வந்த திசை நோக்கி, பாறையில் ஏறி சென்றான்.ஒரு பகுதியில் நிறைய தண்ணீர் தேங்கி இருந்தது. அங்கிருந்து தான், தண்ணீர் கசிந்திருக்க வேண்டும் என ஊகித்தான் செங்கிஸ்கான்.மிகுந்த தாகத்துடன், தண்ணீர் அருந்த குனிந்தவனுக்கு அதிர்ச்சி.அந்த நீர்தேக்கத்தில், கொடிய விஷமுள்ள விலங்கு செத்து கிடந்ததை கண்டான்.'அந்த தண்ணீரை அருந்தினால், இறக்க நேரிடும்' என்று தான், பருந்து தடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். கடமை தவறாத, விசுவாசம் மிக்க செல்லப் பருந்தை நினைத்து, புரண்டு அழுதான் செங்கிஸ்கான்.குழந்தைகளே... ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு. எதிலும் அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்பட்டால் நன்மை கிடைக்கும்.செ.பச்சமுத்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !