போலி கையெழுத்து!
சிவகங்கை மாவட்டம், கோட்டையூர், அருணாசலம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், 1970ல், 6ம் வகுப்பு படித்தேன். அப்போது, அடுத்தவர் கையெழுத்தை மாறாமல் போடும் திறன் பெற்றிருந்தேன். குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் என் வகுப்பு தோழியர், இதைப் பயன்படுத்திக் கொண்டனர். மாதாந்திர மதிப்பெண் பட்டியலில், அவர்களின் பெற்றோர் போலவே, கையெழுத்து போட்டுக் கொடுப்பேன். சில மாதங்கள் இது நீடித்தது.ஒரு நாள், இதுபற்றி வகுப்பாசிரியர் ராமநாதனிடம் கூறி விட்டாள் தோழி சீதா. அன்று மாலை வகுப்பு முடிந்ததும் தனியே அழைத்து, 'நன்கு படிப்பவள் நீ... பிறர் கையெழுத்தை போடுவது தவறாக தெரியவில்லையா... 'பிற்காலத்தில் நல்ல பதவியில் அமரும் போது, தவறான ஒப்பந்தங்களில் போலி கையெழுத்து போடும் வழக்கம் வந்தால் எதிர்காலம் பாழாகி விடும்; இதை இன்றோடு மறந்து விடு...' என்று புத்திமதி கூறினார் ஆசிரியர். அன்றே அப்பழக்கத்தை விட்டேன். தற்போது என் வயது, 50; தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அந்த நிகழ்வை கூறி, விழிப்புடன் இருக்க அறிவுரை வழங்கி வருகிறேன்!- எஸ்.சுப்புலட்சுமி, சிவகங்கை.தொடர்புக்கு: 63802 64104