நரியும் கழுதையும்!
அது மழைக்காலம்.கழுதைகளை மேய்க்க ஓட்டி சென்றான் அவற்றின் உரிமையாளன். சகதியில் மாட்டிக் கொண்டது வயதான கழுதை. உரிமையாளன், 'சேற்றில் அறிவில்லாமல் சிக்கி விட்டாயே...' என திட்டி, மற்ற கழுதைகளை ஓட்டி சென்றான்.சேற்றில் சிக்கி தவித்தபடி இருந்தது கழுதை. அப்போது அருகே வந்த நரி, 'உன்னை தின்னப் போகிறேன்...' என்றது. யோசித்த கழுதை, 'இப்போது, சேற்றில் சிக்கியுள்ளதால் சத்து இல்லாமல் வாடி இருக்கிறேன்; எனக்கு தினி போடு... நன்றாக கொழுத்தால் இன்னும் ருசியாக இருப்பேன்...' என்று நைசாக பேசியது.சம்மதித்த நரி, தீனி எடுத்து தர ஆரம்பித்தது. அந்த உணவை தின்று, தெம்பு பெற்றதும் சேற்றில் இருந்து வெளியேறியது கழுதை.அப்போது, 'உன்னை தின்னட்டுமா...' என, கேட்டது நரி. 'தாராளமாக சாப்பிடலாம்... அதற்கு முன் ஒரு போட்டி வைக்கலாம்... அதில் வென்றால் ஆட்சேபனை இல்லை...' என்றது கழுதை.'என்ன போட்டி...''நீ மூன்று முறை என்னை உதைக்க வேண்டும்; நான் இரண்டு முறை மட்டும் உன்னை உதைப்பேன்...' போட்டிக்கு சம்மதித்து, முதல் ஆட்டமாக மூன்று உதைகளை விட்டது நரி.அசராமல் வாங்கி நின்றது கழுதை. அடுத்தது கழுதையின் முறை. முழு பலத்துடன் உதைத்தது!அவ்வளவு தான்... நிலை குலைந்து தலை சுற்றி, அப்பால் போய் விழுந்தது நரி. 'இன்னும் ஒரு உதை பாக்கி உள்ளதே... அதை வாங்கினால் உயிரோடு இருப்போமா' என, எண்ணி நடுங்கி, பிழைத்தால் போதும் என தப்பி ஓடியது நரி.குழந்தைகளே... துன்பம் வரும்போது கலங்காமல் யோசித்தால், வாழ்வில் வெற்றி அடையலாம்.ஆ.மலர்தாசன்