உள்ளூர் செய்திகள்

பசுமையான நினைவுகள்!

நான் ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயின்றபோது, எங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் ராதா கிருஷ்ணனை, எந்த மாணவர்களுமே மறக்க முடியாது. எங்களுக்கு உடற்பயிற்சியோடு, ஒழுக்கமான நடைமுறைகளை கண்டிப்போடும், அன்போடும் சொல்லித் தருவார். மரக்கன்றுகள் நடுவதிலும் எங்களுக்கு ஆர்வம் ஊட்டினார்.பள்ளிக்கூட வளாகத்தின் உட்புறம் உள்ள திறந்த வெளியில், அதிகமான மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்த அவர், மரக்கன்றை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை, ஒவ்வொரு மாணவர் வசம் ஒப்படைத்தார்.மரக்கன்றின் அடியில் பராமரிக்கும் மாணவர் பெயரையும், வகுப்பையும் குறிக்கும் வண்ணம், போர்டு எழுதி வைக்கவும் ஏற்பாடு செய்தார்.மேலும், வாரம் ஒருமுறை மரக்கன்றுகளின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டு, நன்றாக பராமரிக்கும் மாணவர்களை அழைத்துப் பாராட்டுவதோடு பரிசுகளும் வழங்குவார்.உடற்பயிற்சி ஆசிரியரிடம் பரிசுகள் வாங்குவதற்காகவே போட்டிபோட்டு கன்றுகளை பராமரிப்போம். அன்று, அவர் ஊட்டிய ஆர்வத்தால் இன்றுவரை பசுமை மீது உள்ள ஆர்வம் எங்களுக்கு தொடர்கிறது. வேலை செய்யும் அலுவலக வளாகத்திலும், வீட்டிலும் மரக்கன்றுகளை வளர்ப்பதோடு மற்ற நண்பர்களுக்கும் அதன் அருமையை விளக்கி வருகிறோம். வீட்டின் மொட்டை மாடியிலும் தோட்டம் அமைத்து தினமலர் இதழில் வெளிவந்துள்ளது. தினமும் பராமரித்து மகிழ்கிறோம். பள்ளிக்கூட வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த பசுமையான நினைவுகளை என்றென்றும் மறக்க முடியாது.-எம்.முகம்மது அனீஸ், பனைக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !