டேய்... பிணம் பேசுதுடா!
நான் எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது நடந்த நிகழ்ச்சி. ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி. அந்த ஊரில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பெண்கள் மட்டும் பங்கு பெறும் ஒரு சிறிய நாடகம் போட்டோம். இதைக் கேள்விப்பட்ட எங்கள் வகுப்புத் தோழர்களும் வந்திருந்தனர். முதலில் இரண்டு பெண்கள் ஒரு சாமி படம் முன்பு பாடிக்கொண்டு பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். அது ஒரு பெரிய பாட்டு. பாதிப் பாட்டிலேயே பூக்கள் தீர்ந்து விட, அவர்கள் திருதிருவென விழிக்க, கைகளை மட்டும் கூப்பிக் கொண்டு பாடச் சொல்லி நான் ஜாடைகாட்டினேன். பிறகு, ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் பெற்றோர் இறந்து விட, அந்தப் பெண் பாடிக் கொண்டே வந்து மயங்கி விழுந்து இறந்து போவதாக முடிவு. அந்தப் பெண்ணும் இறந்தது போல் கீழே விழுந்து விட்டாள். ஆனால், திரை ஒரு கம்பியில் சிக்கியதால் இறங்கவே இல்லை. 5 நிமிடம் பொறுத்த அந்தப் பெண், தலையைத் தூக்கி, 'திரையை இறக்குங்க' என்று கத்த, வந்திருந்த என் தோழர்கள், 'டேய் பிணம் எழுந்து பேசுது... பேய், பேய்' என்று தமாஷாக கத்த, முன் வரிசையில் அமர்ந்திருந்த குழந்தைகள் அலற, ஸ்டேஜில் இருந்து அந்தப் பெண் எழுந்து ஓட, காமெடியாகப் போய்விட்டது அந்தக் காட்சி. இன்று நினைத்தாலும் ஒரே சிரிப்புதான்.மறக்க முடியாத அந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.- ஆர்.பார்வதி, கொரட்டூர்.