எங்கும் நேர்மை!
சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 7ம் வகுப்பு படித்த போது, மதிய உணவுக்காக பணம் தந்து, 'ஓட்டலில் சாப்பிடு...' என்பார் அப்பா; இதற்காகவே காத்திருப்பேன்.பள்ளியிலிருந்து, ஐந்து நிமிட நடை துாரத்தில், இரண்டு ஓட்டல்கள் இருந்தன. அங்கு உணவு அருமையாக இருக்கும்; சாம்பார் வாசனை துாக்கும்; இட்லி, வடை, தோசை என நண்பனுடன் சாப்பிடுவேன். ஒருமுறை, 'ஓட்டல்களில் எப்போதும் கூட்டமாக இருக்கிறதே; சாப்பிட்ட பணம் தராமல் வெளியேறினால் கண்டுபிடிப்பரா... சோதனை செய்து பார்க்கலாமா...' என்று நண்பனிடம் கூறினேன்; சம்மதித்தான்.அன்று சாப்பிட்ட உணவுக்கு, காசு கொடுக்காமல் நைசாக நழுவினோம். யாரும் கண்டுபிடிக்கவில்லை என எண்ணிய வேளை, 'பில்லு கொடுக்காம போறாங்க...' என்று ஒரு குரல் ஒலிக்க, ஓடி விட்டோம். பயத்தில் மனம் குறுகுறுத்தது. அன்று இரவு போலீசார், வீட்டு கதவை தட்டுவது போல் கனவுகள் வந்தன. அந்த வார உடற்பயிற்சி வகுப்பில், எங்களை மட்டும் தனியாக அழைத்து, 'மைதானத்தை சுற்றி ஓடுங்கள்...' என்றார் ஆசிரியை; புரியாமல் ஓடினோம். ஓடி களைத்து விழுந்தவுடன், 'ஓட்டலில் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் நழுவலாமா... அது தவறு என உணர்த்த தான் இந்த தண்டனை. அன்று நீங்கள் சாப்பிட்டதற்கும் சேர்த்து பணம் கொடுத்து விட்டேன்...' என்றார்.பணிவுடன், 'விளையாட்டாக செய்தோமே தவிர, ஏமாற்றும் நோக்கம் இல்லை...' என தெளிவுபடுத்தினேன். சிரித்தபடி, 'தமாசுக்காக கூட, இது போல் செய்வது பெரிய தவறு...' என்று அறிவுறுத்தினார்.என் வயது, 69; அந்த ஆசிரியை அறிவுரைப்படி, இன்றும் நேர்மையை கடைபிடித்து வருகிறேன்.- ஆர்.ரகோத்தமன், பெங்களூரு.