பப்பு மம்முனா ரொம்ப பிடிக்கும்!
பருப்பு இல்லாத கிச்சன் உண்டா என்ன? இந்த பருப்பின் முக்கியத்துவம் பற்றி தெரிஞ்சுக்கிறீங்களா?* உணவுகளில் பருப்புகளின் சிறப்பை மக்கள் மனதில் பதியச் செய்யும் முயற்சியில், 'ஐ.நா'வின் 68ம் பொதுசபை, 2016ம் ஆண்டை, 'சர்வதேச பருப்புகள்' ஆண்டாக அறிவித்துள்ளது.* தானியங்கள் தரும் மாவுச்சத்து, கீரைகள், காய், கனிகள் தரும் உயிர்ச்சத்தையும், மாமிச உணவுகள் தரும் புரதச்சத்தையும் ஒட்டு மொத்தமாகத் தரவல்லது பருப்புகள்தான். ஒருகிலோ பருப்பு உற்பத்தி செய்ய, 50 லிட்டர் தண்ணீர் போதும். ஆனால், ஒரு கிலோ கோழிக்கறியை உற்பத்தி செய்ய, 4,325 லிட்டர் தண்ணீர் தேவை; ஆட்டுக்கறிக்கு 5,320 லிட்டர் தண்ணீர் தேவை.* தானியங்களை காட்டிலும், பருப்பு உற்பத்தி செய்ய குறைந்தளவு நீரே போதும். ஆனால், பருப்புகளில்தான் அதிகளவு புரதச்சத்து கிடைக்கிறது. பாலில் கிடைக்கும் புரதச்சத்தை பெற, ஐந்தில் ஒரு பங்கு செலவில் பருப்புகளின் மூலம் புரதத்தை பெறலாம். பருப்புகளில் அதன் எடையில் 20 முதல் 25 சதவீதம் புரதச்சத்து உள்ளது. ஆனால், கோதுமையில் அதன் எடை 10 சதவீதமும், ஆட்டுக்கறியில் 30 முதல் 40 சதவீதமும் புரதம் உள்ளது.* பருப்புகளின் ஆயுட்காலம் அதிகம் என்பது சமையல் சிறப்புகளில் ஒன்று. பருப்புகள் மற்றும் உலர்ந்த பீன்ஸ் பருப்புகள் போன்றவைகளின் ஆயுள் அதிகம் என்பதால் இதை அதிக நாட்கள் அதன் சத்து குறையாமல் பாதுகாக்கலாம்.* பருப்பு வகைகளில் துவரம் பருப்பு சிறப்பானது. காரணம், இது புரதம் மிக்க எளிதில் செரிக்கும் தன்மையுள்ளது. துவரம் பருப்புகளில் உடல் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு அமிலங்களான, 'லினோலியாக்' மற்றும் 'லினோலினிக்' அமிலங்கள் நிறைந்துள்ளன.* பருப்பு வகைகளில் உளுத்தம் பருப்பை ஏழைகளின் மாமிச உணவு என்கின்றனர். அந்தளவு உடல் வலுவை கூட்டும் உணவாக உளுந்து உள்ளது. வாதம், மூட்டுவலி, நரம்பு வியாதிகளுக்கு உளுத்தம் பருப்பு மருந்தாக பயன்படுகிறது.* உளுந்தில் உள்ள, 'அராபினோ காலக்டான்' எனும் சர்க்கரைப் பொருள்தான் உளுந்தை பயன்படுத்தி தயாராகும் இட்லி, தோசை, வடைக்கு மிருதுவான தன்மையை தருகிறது.* பருப்பு வகைகளில் உள்ள மாவுச்சத்தில் கரையும் சர்க்கரை நார்ச்சத்து மற்றும் பயன்படுத்தப்படாத உடலுக்கு கிடைக்காத ஓலிகோ சர்க்கரை எனும் மாவுச்சத்தும் உள்ளது. உடலுக்கு கிடைக்காத ஓலிகோ சர்க்கரைப் பொருள் தான் பருப்பு வகைகளை உண்ணும் போது நமக்கு வாயுத் தொல்லையை உண்டாக்குகிறது.* உலகளவில், கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீதம் பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டில்தான் வரலாறு காணாத அளவு பருப்பு வகைகள் உற்பத்தியானதாக ஐ.நா.,வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டு மட்டும் 2ஆயிரத்து 534 மில்லியன் டன் பருப்பு வகைகள் உற்பத்தியானது.* உலகளவில் ஆண்டுக்கு, 65 மில்லியன் டன்கள் பருப்பு உற்பத்தியாகிறது என்றால், அதில் இந்தியாவில் மட்டும், 18 மில்லியன் டன்கள் பருப்பு உற்பத்தியாகிறது. ஆனால், தனது தேவைக்கு, 4 முதல் 5 டன் பருப்பு வகைகளை இந்தியா ஆண்டு ஒன்றுக்கு இறக்குமதி செய்கிறது.* உலகிலேயே அதிகளவு பருப்பு உற்பத்தி செய்யும் நாடும் இந்தியாதான்; உலகிலேயே அதிகளவு பருப்பு இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான். * இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு, 700 முதல் 800 கிலோ பருப்புதான் உற்பத்தியாகிறது. ஆனால், கனடாவில் ஒரு ஹெக்டேருக்கு, 2000 கிலோ பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் மற்ற நாடுகளில் கூட ஒரு ஹெக்ட்டேருக்கு 1,500 கிலோ பருப்பு உற்பத்தியாகிறது.* இந்தியாவிலுள்ள ஏறத்தாழ, 20 முதல் 25 மில்லியன் ஹெக்டேர் விளை நிலத்தில் பருப்பு உற்பத்தியாவது ஐந்து மில்லியன் ஹெக்டேரில்தான். இதனால்தான் பருப்புகளின் விலை அதிகளவு விற்கப்படுகிறது.* இந்தியாவில் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் பருப்பு உற்பத்தி அதிகம். இந்தியாவில் உற்பத்தியாகும் பாதி அளவு பருப்புகள் இங்குதான் உற்பத்தியாகிறது.* இந்தியாவில் கிட்டத்தட்ட, 15 ஆயிரம் பருப்பு உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன.* இந்தியாவில் சர்வேபடி கிராமப்பகுதிகளில் தங்களது ஆண்டு செலவுகளில் மூன்று சதவீதத்தை பருப்புகளுக்காக செலவிடுகின்றனர். ஆனால், நகர்ப்புறங்களில் இரண்டு சதவீதம் மட்டும்தான் செலவிடுகின்றனர்.* தற்போதைய தேவை இந்திய அளவில், 22 மில்லியன் டன்கள்.* வளரும் நாடுகளில் புரதச்சத்திற்காக, 75 சதவீத தேவையை தற்போது பருப்புகள் மூலம் தான் சரிகட்டுகின்றனர்.பப்பு மம்மு இனி குழந்தைகளுக்கு மட்டுமல்ல எங்களது செல்ல உணவும் பப்பு மம்முதான்! பருப்பே உனக்கு ஒரு செல்ல, 'உம்மா!'- கோவீ.ராஜேந்திரன்.