உள்ளூர் செய்திகள்

கூடி வாழ்ந்தால்... (2)

சென்ற வாரம்: குட்டிகளை கொன்ற வேட்டைக்காரர் குடும்பத்தை அழித்தது சிங்க ராஜா. அங்கிருந்து துாக்கி வந்த குழந்தையை அன்புடன் வளர்த்தது சிங்க குட்டி. இனி - சிங்க குட்டியின் முதுகில் அமர்ந்திருந்தான் சிறுவன். அதன் பிடரியைப் பிடித்து, 'வேகமாக போ... உணவு தேட வேண்டாமா...' என்றான். சற்று துாரத்தில் ஒரு நீர்நிலை அருகே நின்றது சிங்க குட்டி.சிறுவனிடம், 'இன்று எனக்கான உணவை நீ தேடிக் கொண்டு வா... உன் உணவை நான் எடுத்து வருகிறேன்... பிற்பகலில் மீண்டும் இதே இடத்தில் சந்திப்போம்...' என்றது. உடன்பட்டான் சிறுவன். ஆளுக்கொரு திசையில் சென்றனர்.நாவல் மரத்தை கண்டது சிங்க குட்டி. கிளையில் பாடிக்கொண்டிருந்த குருவியிடம், 'கொஞ்சம் பழங்கள் பறிக்க உதவி செய்வாயா...' என கேட்டது.'உனக்கு எதற்கு இந்த பழங்கள்... நீ தான் மாமிசம் உண்பவனாயிற்றே...' 'உண்மை தான். இந்த பழங்களை என் உடன்பிறவா தம்பிக்கு எடுத்து செல்வேன்... அதனால் தான் கேட்கிறேன். பழம் பறித்து கொடுப்பாயா...'கருணை மொழி கேட்டு, பறித்து போட்டது குருவி. அவற்றை சேகரித்தபடி, 'உதவிக்கு மிக்க நன்றி...' என விடைபெற்றது சிங்கக்குட்டி.நீர்நிலை அருகே, சிறுவன் வரவுக்காக பசியுடன் காத்திருந்தது.மற்றொரு திசையில் சென்ற சிறுவன், புதை நிலத்தில் சிக்கி தவித்த குதிரையைக் கண்டான். விழுதால் கட்டி, அதை மீட்க முயன்றான். அவன் செயலால் மெல்ல எழுந்தது குதிரை. சிறுவன் முயற்சி வென்றது.தப்பிய குதிரை, 'நண்பா... பேரறிவால் உதவி காப்பாற்றினாய்... என்றென்றும் உனக்கு கடமைப் பட்டுள்ளேன்; என்ன உதவி வேண்டுமோ கேள்...' என்றது.'உயிரைக் காப்பாற்றியதற்கு பிரதிபலனாக உதவி கேட்பது சரியல்ல... நீ உயிர் மீண்டு வந்ததே மகிழ்ச்சி தருகிறது...''மாலையாகிறது. எங்கே விட வேண்டும் என்று சொல்... முதுகில் ஏற்றி செல்கிறேன்...' குதிரையில் அமர்ந்தான் சிறுவன். அது, பாய்ந்து ஓடி நீர்நிலை அருகே வந்தது. இதைக்கண்ட சிங்க குட்டி, 'ஆஹா... உணவுக்காக பெரிய குதிரையையே கொண்டு வருகிறானே சகோதரன்... அடித்து புசிக்க வேண்டியது தான்' என, எண்ணி மகிழ்ந்தது. கடும் பசியால் குதிரை மீது பாய தயாரானது. குதிரையிலிருந்து இறங்கி வந்த சிறுவன், 'இன்று உனக்கு மாமிசம் எதுவும் கிடைக்கவில்லை... மன்னித்து விடு...' என்றான்.ஒன்றும் புரியாமல், 'பரவாயில்லை... சமாளித்து கொள்ளலாம். நீ பசியுடன் இருப்பாய். நாவல் பழங்கள் வைத்து இருக்கிறேன். முதலில் சாப்பிடு... இந்த குதிரையுடன் எப்படி பழகினாய்...' என்றது சிங்க குட்டி.'ஆபத்தில் சிக்கியிருந்தது. காப்பாற்றி நண்பனாக்கியுள்ளேன். உனக்கு பசியாக இருந்தாலும், கருணையுடன் குதிரை மீது பாய்ந்து விடாதே... என் நண்பன் என்பதால் விட்டு விடு...' என்றான் சிறுவன்.'உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவேனே தவிர, உன் சொல் மீறி கொல்ல மாட்டேன்...' கண்ணீர் மல்கியது சிங்க குட்டி.இரவாகி விட்டதால் நன்றியுடன் விடை பெற்றது குதிரை.கண்ணீர் மல்க நின்றான் சிறுவன். சிங்க குட்டியும் அன்பில் கரைந்தது. பசி பறந்துவிட்டது. சிறுவனுக்கு பெயர் சூட்ட விரும்பியது சிங்க ராஜா. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அனைத்து உயிரினங்களையும் அழைக்க உத்தரவு பிறப்பித்தது. அதை ஏற்று பறந்தது குருவி.பறவைகளும், மிருகங்களும் கூடின. ஆட்டம், கொண்டாட்டம் களைகட்டியது. சிறுவனுக்கு, 'சிகா' என பெயர் சூட்டி அழைத்தது சிங்க ராஜா.ஆரவாரம் செய்தன விலங்குகள். பின், 'காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களையும் கனிவுமிக்க, அறிவால் காப்பான் சிகா...' என, அறிவித்தது சிங்க ராஜா.வாழ்த்து கோஷம் விண்ணை முட்டியது.'கருணையுள்ள சிகா, எல்லாருக்கும் சம உரிமைக் கொடுப்பார்; உயிரை துச்சமாக மதித்து அனைவரையும் பாதுகாப்பார்...'பாராட்டியது குதிரை.அறுசுவை விருந்து பறிமாறப்பட்டது. விழா முடிந்து மாலையில் கூடு நோக்கி பறந்த குருவி, காட்டில் நெருப்பு பற்றி எரிவதைக் கண்டது. திரும்பி, சிகாவிடம் தகவல் சொன்னது. முதலில் பதட்டமடைந்த சிகா, நிதானமாக யோசித்தான். சிங்க ராஜாவை சந்தித்து, 'உடனே காட்டு தீயை அணைக்க வேண்டும். இல்லையேல், மிகப்பெரிய அசம்பாவிதமும், உயிர் சேதமும் ஏற்பட்டக்கூடும்...' என்றான். குருவி வழிகாட்ட மரங்களில் தாவினான் சிகா. இதைக்கண்ட குதிரை, ' வா... வேகமாக அழைத்து செல்கிறேன்...' என்றது.மின்னல் வேகத்தில் பாய்ந்து, காட்டில் தீ விபத்து பகுதியை கண்டான் சிகா. தும்பிக்கையில் நீரை எடுத்து, தீயை அணைக்க முயன்றது யானை.பதட்டமின்றி யோசித்த சிகா, குரங்குகளை அழைத்தான். பனை மரங்களில் ஓலைகளை வீழ்த்தக் கூறினான். அவற்றை மூடாக்காக போட்டு, காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது.தீயை அணைக்க முயன்ற யானையும், குதிரையும் காயமுற்றிருந்தன. மருந்து தேடிய குரங்குகள், மூலிகைகளை சிகாவிடம் கொடுத்தன. அவற்றில் சாறு பிழிந்து காயங்களில் தடவினான் சிகா. அவை ஆறுதல் அடைந்தன. பொழுது விடிந்தது. அன்பால் நிறைந்த காடு, அமைதியாக இருந்தது. அப்போது, மிருகங்களுடன் சண்டைக்கு தயாரானது புலி. இதை கவனித்த சிகா குறுக்கிட்டு, 'சண்டையிட வேண்டாம். ஒற்றுமை தான் நம் பலம். அனைவரும் நட்பு பாராட்ட வேண்டும்...' என்றான்.தலைகுனிந்த படி, 'மன்னித்து விடு...' என்றது புலி.உயிரினங்கள் எல்லாம் உதவி புரிந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தன.குழந்தைகளே... ஒன்றுபட்டால் வாழ்வு உண்டு; ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு.- முற்றும்.பா.குமரேசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !