உள்ளூர் செய்திகள்

எண் எழுத்து இகழேல்!

''விக்னேஷ்... கேழ்வரகு சீடையை சாப்பிட்டதும், படிக்க வா...'' அழைத்தாள் அம்மா கமலம். ''சிறிது நேரம் உங்க அலைபேசியில் விளையாடிட்டு வர்றேன்...'' ''ரொம்ப நேரமா விளையாடுற; படிக்க பாடம் நிறைய இருக்கு...'' ''போங்கம்மா... எப்ப பாரு, படி படின்னு சொல்றீங்க; அதுலயும் இந்த கணக்கு பாடம் எனக்கு பிடிக்கவேயில்லை... இப்ப தான், அலைபேசியிலே எல்லா கணக்கையும் போட்டுடலாமே; எதுக்கு போய் கூட்டு, கழின்னு சொல்றீங்க...''அலட்சியமாக கூறினான். ''உன் தாத்தா, கணக்கை மனதால் போடுவார்; அவருக்கு பேப்பரும், பேனாவும் தேவையே இல்லை; சூரியன் இருக்கும் இடத்தையும், நிழலையும் பார்த்து நேரத்தை கணிப்பார்; அடிப்படை கல்வியை முறையாக கற்று அறிவை கூர்மையாக வைத்திருப்பது முக்கியம்...'' ''அலைபேசி கையில் இருந்தா இந்த உலகமே விரல் நுனியில்...'' ''நல்லது, கெட்டதை தெரிஞ்சிக்க கல்வி மிகவும் அவசியம்; அதனால் தான், படிக்காத மேதை காமராஜர், இலவச கல்வி கூடங்களை திறந்தார்; குழந்தைகள், பசியாற மதிய உணவுத் திட்டத்தையும் ஆரம்பித்தார்...'' ''உலகமே அலைபேசி வடிவில் உள்ளங்கையில் இருக்கும் போது, எதற்கு ஏட்டுக் கல்வி...'' விதண்டா வாதம் செய்தான் விக்னேஷ்.அப்போது -பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் கோகுல் அங்கு வந்தான். குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருப்பதை கூறி அழைத்தான். அதில் பங்கேற்க சென்றான் விக்னேஷ். குழந்தைகள் வண்ண உடையணிந்து, மழலை குரலில் ஆத்திசூடி, திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகளை கூறி கலகலப்பாக்கினர்.கடைசியாக பொது அறிவு போட்டி நடந்தது. விக்னேசுக்கு ஐந்து கேள்விக்கு மட்டுமே பதில் தெரிந்திருந்தது. விழாவில் தலைமை தாங்கி பேசியவர், ''மேடையில் குழந்தைகளின் திறனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்திருப்பீர்கள். அதற்கு காரணம், குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற தமிழாசிரியர் தான். அவர் பொறுமையுடன் எல்லாவற்றையும் கற்றுத் தந்துள்ளார். அவரது அறையை குழந்தைகள் விளையாட, படிக்க அனுமதித்துள்ளார்...''அதில் அறிவூட்டும் கதை, கணித புதிர்கள், வரலாற்று செய்திகள், அறிவியல் கண்டுப்பிடிப்புகள் கொண்ட புத்தகங்கள் மற்றும் பல்லாங்குழி, தாயக்கட்டை, ஏழுகல் விளையாட்டு, சதுரங்கம், கேரம் பலகை போன்றவற்றை வைத்துள்ளார்...''செய்திதாள் வாசிக்க கற்று கொடுத்து பொது அறிவை வளர்த்துள்ளார்...'' என, நெகிழ்வுடன் பாராட்டினார். கூடியிருந்தோர் உற்சாகமாக கரவொலி எழுப்பினர். விழா முடிந்தது. கோகுலுடன் சென்ற விக்னேஷ், அந்த ஆசிரியர் அறையை பார்த்து வியந்தான். அறிவு களஞ்சியமாக சிறு நுாலகமும் அங்கு இருந்தது. விதாண்டா வாதம் பேசியது தவறு என புரிந்து, ''நானும் இங்கு படிக்க வரலாமா...'' என்று கேட்டான்.''தாராளமாக... எண்ணும், எழுத்தும் கண்கள் போன்றது; அதை படிக்க அலட்சியம் காட்ட கூடாது...'' என்றான் கோகுல்.அம்மாவிடம் அனுமதி பெற்று தவறாமல் புத்தகசாலையை பயன்படுத்தினான் விக்னேஷ். அதன் முகப்பில், அவ்வையார் உரைத்த, 'எண் எழுத்து இகழேல்!' என்ற பொன்மொழி பதிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளே... அலட்சியம் காட்டாமல் எண், எழுத்துக்களை முழுமையாக படியுங்கள்!பா.செண்பகவல்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !