உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்...

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சகோதரன் சம்பத் எழுதுவது. மாணவ, மாணவியரை அன்பால் திருத்தும் உன்னதப் பணியை செய்து வருகிறீர்கள். மிக்க நன்றி.உங்களிடம் என்னுடைய நீண்ட நாள் மனக்குறையை கொட்ட விரும்புகிறேன். நான் குக்கிராமத்தில் வசிக்கிறேன். நிறைய சொத்து, பத்துக்கள் உண்டு. பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளேன். எனவே, அவற்றை ஆள ஒரு ஆண் வாரிசு இல்லையே... என்பது தான் என்னுடைய மனக்குறை. ஆண் வாரிசுக்காக வரிசையாக குழந்தை பெறப் போக, நான்கும் பெண்கள். இதில், கடைசி மகள் ஆண் குழந்தையாக இருப்பாள் என நினைத்து மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவளும் பெண்ணாக பிறந்ததில் அந்தக் குழந்தை மீது மகா வெறுப்பு எனக்கு.இதனால் என் மனைவியையும் வெறுக்கிறேன். நாலையும் பெண் பிள்ளையாக பெத்து கொடுத்துவிட்டாளே... என்ற ஆத்திரத்தில் அவளுடன் சரியாக பேசுவது இல்லை. என் கடைசி மகள், தற்போது பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளை தூக்கி கொஞ்சியதோ, பேசுவதோ கூட கிடையாது. மகன் இல்லையே... என்ற ஏக்கத்தில் என் நாலாவது மகளை மிகவும் வெறுக்கிறேன். நான் செய்வது தவறு என்று எனக்கு புரிகிறது. ஆனால், என் ஆழ்மனதில் ஏற்பட்ட கசப்புகளை மாற்றவே முடியவில்லை. என்ன செய்வது சகோதரி?பிரதர்... என்ன பைத்தியக்காரத்தனம் இது. நான்கும் பெண் பிள்ளைகளாக பிறப்பதற்கு நீங்கள்தானே காரணம். பொதுவாக, ஆணின் உயிரணுக்களில் 22 சோமாடிக் குரோமோசோம்களோடு ஒரு X அல்லது Y குரோமோசோம் இருக்கும்.அதேபோல், பெண்ணின் சினை முட்டையில் 22 குரோமோசோம்களோடு ஒரு X குரோமோசோம் மட்டும் இருக்கும். இந்த X,Yகுரோமோசோம்கள்தான் பாலினத்தை நிர்ணயிக்கின்றன.ஆணிடமிருந்து X குரோமோசோம் பெண்ணின் சினை முட்டையை அடைந்தால் பெண் குழந்தை பிறக்கும். அதே போல் Y குரோமோசோம் வந்தால் ஆண் குழந்தை பிறக்கும். (தகவல்: டாக்டர் அரவிந்த் ராமநாதன், மரபியல் ஆராய்ச்சி நிபுணர்) நன்றி அரவிந்த் சார்.இதற்கு உங்க மனைவியும், மகளும் எந்த விதத்தில் காரணமாக முடியும்னு சொல்லுங்க பிரதர்!ஒண்ணு தெரியுமா பிரதர்... எங்களுடைய உறவினர் ஒருவருக்கு மூன்றும் ஆண் பிள்ளைகள். அவரது தங்கச்சிக்கு மூன்று பெண் பிள்ளைகள்.'நான் ஆண் சிங்கங்களை பெற்று வச்சிருக்கேன்... எனக்கு என்ன கொறைச்சல்... மூணு பொம்பள பிள்ளைகளை பெத்து வச்சிருக்கிற நீ, எவ்ளோ கஷ்டப்படபோறீயோ... இதுகளுக்கு சீர், செனத்தி செஞ்சே உங்க சொத்து எல்லாம் அழிஞ்சிடும்...' என்று சொல்லி கணவரின் தங்கச்சியை ரொம்ப நக்கல் பண்ணுவார் அண்ணியார்.கடைசியில், நடந்தது என்ன தெரியுமா? இந்த மூன்று ஆண் சிங்கங்களும், மூன்று அத்தை மகள்களின் அழகில் மயங்கி, அவர்களது வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிட்டனர். அத்தை மகள்களோ மாமியார், மாமனாரை கிட்டே சேர்ப்பதே இல்லை; மதிப்பதும் இல்லை. தங்களது அம்மாவை படுத்திய பாடால் ஏற்பட்ட வெறுப்பு. இன்னமும் மாறவில்லை. மாறாக, தங்கள் பெற்றோரை நன்கு கவனித்து கொள்கின்றனர். பிள்ளைகளைப் பிரிந்து இருக்க முடியாமல், பேரன், பேத்திகளோடு சேர்ந்தும் வாழ முடியாமல், மிகவும் வேதனையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்பொழுது மகன்கள் மட்டும் வந்து இவர்களை பார்த்துவிட்டுச் செல்வர்.சிங்கக் குட்டிகளை பெத்த தாயார், அசிங்கப்பட்டு தலைகுனிந்து நிற்கின்றார். பெண் மயில்களை பெற்ற பெற்றோரோ, நல்ல சுகமான ராஜ வாழ்க்கையோடு பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய உலகம்.தயது செய்து ஆண் வாரிசு, பரம்பரைச் சொத்து, சொந்தம் விட்டுப் போகக்கூடாது... இந்த 'சென்டிமென்ட்ஸ்' எல்லாத்தையும் தூக்கி எறிங்க... வரப்போகும் மருமகள்கள் உங்கள் சொத்தைதான் மதிப்பார்கள்... உங்களை அல்ல?கடைசி காலத்தில் உங்களை காப்பாற்றக் கூடிய பெண் குழந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுங்கள்; அன்பு காட்டுங்கள். கடைசி வரையில் உங்களது பயணத்தில் தோள் கொடுக்கும் மனைவியிடம் சொல்லுங்க ஒரு சாரி.... நான்கு அழகு மயில்களைப் பெற்றதற்காக ஒரு பெருமையோடு, 'மிடுக்' நடைபோடுங்க பிரதர். உங்கள் குடும்பத்தில் மீண்டும் பழைய மகிழ்ச்சி மலரட்டும்!உங்கள் அன்பு சகோதரி,ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !