உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்...

அன்பு ஜெனி ஆன்டிக்கு, இனிய வணக்கம்! எங்கள் பிரச்னைக்கு பதில் சொல்ல நீங்கள் வந்ததிலிருந்து, நாங்கள், 'எவ்ளோ' நிம்மதியா இருக்கோம் தெரியுமா ஆன்டி? இப்ப என்னோட பிரச்னையை சொல்றேன். என் பெயர்... ---- +1 படிக்கிறேன். எங்கப்பா ஒரு தமிழ்பற்றாளர் என்றே சொல்லலாம். தமிழை மிகவும் நேசிக்கும் அவர், +2 முடித்த பின், பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கச் சொல்றார். தமிழில் பேசினாலே மதிப்பில்லாத இந்த காலத்தில், தமிழ் இலக்கியம் படித்தால் எனக்கு வேலை கிடைக்குமா ஆன்டி?'ஆங்கில இலக்கியம்' படிக்கிறேன்னு சொல்றேன். 'அதெல்லாம் முடியாது நீ தமிழ் இலக்கியம் படி'ன்னு சொல்றார். எனக்கு தமிழில் ஆர்வம் உண்டு; நன்றாகவும் படிப்பேன். என்னுடைய சந்தேகம் எல்லாம் தமிழ் படித்தால் எனக்கு வேலை கிடைக்குமா என்பதுதான். நீங்க என்ன சொல்றீங்க ஆன்டி? நீங்கள் சொல்லும்,'அட்வைஸ்'சை அப்படியே ஏற்கிறேன். வணக்கம்! என் அன்பு தமிழச்சியே... தமிழ் மொழி இன்னும் சாகவில்லை என்பதற்கு உன் தகப்பனை போன்றோர் இருப்பதுதான் காரணம் மகளே... ரொம்ப சந்தோஷம். உங்கப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறு.உனக்கு ஒண்ணு தெரியுமா? அமெரிக்கா என்றாலே ஆங்கிலம்தான் பேசுவாங்கன்னு நினைக்கிறோம். ஆனால், அங்கு வாழும் தமிழ் குடும்பங்கள், தாய்மொழியை வளர்ப்பதிலும், தமிழ் கலாச்சாரத்தை பேணுவதிலும் மிகவும் அக்கரை கொண்டுள்ளனர். நியூஜெர்ஸி மாநிலத்தில், 'திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி' என்னும் அமைப்பு மூலம், தமிழ் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை போதிக்கின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள், மிகுந்த ஆர்வத்துடன் தமிழை எழுதவும், பேசவும் படிக்கவும் செய்கின்றனர். எனவே, நம் தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது.உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்? பி.ஏ., தமிழ் இலக்கியம் படித்துவிட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வு கூட தமிழில் எழுதி, ஐ.ஏ.எஸ்., ஆகலாம். பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணினால், 'பேங்க் ஆபீசர்' ஆகலாம். பி.எட்., படித்துவிட்டால் பள்ளிகளில், 'தமிழம்மா' ஆகலாம்.இன்றைக்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கிய வகுப்புகளில் ஒரு இடம் கூட காலி இல்லை. அனைத்து, 'சீட்'களும் நிரம்பி விடுகிறது.இன்று பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகத்துறையில், தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உண்டு.அப்புறம் மொழிப்பெயர்ப்புத்துறை, ஊடகத்துறை, கற்பிக்கும் துறை தவிர மனித வள பயிற்சித்துறை என ஏராளமான துறைகளில் வேலை வாய்ப்புகள் உண்டு. எனவே, தைரியமாக சேர்ந்துகொள். உன் அப்பாவின் ஆசையை நிறைவேற்று. பெற்றோர் ஆசியுடன் உன் எதிர்காலம் சிறப்பாக அமையும். சந்தேகம் தீர்ந்ததா மகளே...உங்கள் அன்பு தமிழச்சி, ஜெனிபர் பிரேம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !