உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (87)

அன்பு ஆன்டிக்கு...நான், 10 வயது சிறுவன். என் தாத்தாவுக்கு வயது 67; என் மேல் கொள்ளை பிரியமாக இருப்பார். கேட்கும் விளையாட்டு பொருட்கள் மற்றும் சாக்லேட்களை தவறாமல் வாங்கிக் கொடுப்பார். யானை போல தவழ, அவர் மீது சவாரி போவது என் வழக்கம்; சில நேரங்களில், உப்பு மூட்டை துாக்கிக் கொள்வார்.அவருக்கு போன மாதம் கொரோனா வந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சில வாரங்களுக்கு பின், குணமாகி வீடு திரும்பினார்.அவருக்கு நீரழிவு நோயும், உயர் ரத்த அழுத்தமும் உண்டு.ஒருமுறை கொரோனா நோய் வந்து குணமானவருக்கு, மீண்டும் வராது தானே ஆன்டி... என் ஐயத்தை தீர்த்தருளுங்கள்.அன்பு மகனே...'கோவிட் 19' என்பது, வைரசால் ஏற்படும் தொற்று நோய்.அது, ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்று சிறு உபாதை அல்ல. கொரோனா நோயிலிருந்து குணமாக, குறைந்தபட்சம், இரண்டு வாரங்கள் முதல் அதிகபட்சம், ஆறு வாரங்கள் வரை ஆகும். இந்தியாவில், 1 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1.4 லட்சம் பேர் இறந்திருக்கின்றனர். நம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 80 சதவீத பேர் எளிதாக குணமடைகின்றனர்.கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமானவருக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பது பொய். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மீண்டும் வர வாய்ப்பு உண்டு.ஆனால், உணவு, சிறுநீர், மலம் வழியாக கொரோனா தொற்றுவதில்லை.கொரோனா வந்து குணமானோருக்கு, 'போஸ்ட் கோவிட் 19 சின்ட்ரோம்' என்ற பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு கீழ்க்கண்ட வகை அவதிகளை ஏற்படுத்தும்.* உடல் மனசோர்வு* மூச்சு விடுதலில் குறைபாடு* இருமல்* மூட்டு வலி* மார்பு வலி* தாறுமாறான இதய துடிப்பு* நுகர்ச்சி, சுவையறிதல் மரத்தல்* துாக்கமின்மை* நினைவுதிறன் குறைவு* உடலில் தடிப்புகள் மற்றும் முடி உதிர்தல்* மூளை, நுரையீரல், இதயம் சேதமடைதல்* தற்காலிக பக்கவாதம் மற்றும் மறதி நோய்* ரத்த உறைவு மற்றும் ரத்த குழாய் பிரச்னை* கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு* ரத்த ஓட்டம் குறைந்து, கால்கள் பாதிக்கப்படக்கூடும்.கொரோனா வந்து குணமானோர் அடிக்கடி ஆக்சி மீட்டர் பயன்படுத்தி, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அறிய வேண்டும். தேவைப்பட்டால், வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி சுவாசிக்கலாம்.முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி விட்டு வாழ்வதும், கைகளை கிருமி நாசினியால் அடிக்கடி சுத்தம் செய்வதும் நல்லது. வெளியில் செல்வதை தவிர்ப்பதும், உன் தாத்தாவுக்கு உகந்தது.தாத்தாவின் உணவில், உப்பு, இனிப்பை குறைக்கவும்.இரண்டு நாளைக்கு ஒருமுறை, கபசுர குடிநீர் குடிப்பது பாதுகாப்பு.உணவில், தினமும் இரு அவித்த முட்டைகள் சேர்த்துக் கொள்ளலாம்.இஞ்சி, சீரகம், மஞ்சள், அதிமதுரம், புதினா கலந்த பானத்தை கொடுக்கலாம்.செயற்கை இனிப்பு சேர்க்காத பழச்சாறு அருந்தலாம்; சூடான உணவை சாப்பிடுதல் நலம். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சிறிது காலத்துக்கு, தாத்தாவின் மீது யானை சவாரியோ, உப்பு மூட்டையோ ஏறாமலிருப்பது உனக்கு நல்லது. - ப்ரியங்களுடன், பிளாரன்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !