உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (106)

அன்பு பிளாரன்ஸ்...என் வயது, 42; திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன; குழந்தையின்மையால், 11 ஆண்டுகள் தவித்தேன்; கருத்தரிப்பு மையத்தில் கணவருடன் சிகிச்சை பெற்றேன். அதன் பயனாக, மகன் பிறந்தான்.தற்போது, மகனுக்கு, 8 வயது. நீண்ட நாட்களுக்குப் பின் பிறந்ததால், செல்லமாக வளர்கிறான். இரண்டு ஆண்டுகளாக, அவனிடம் வினோத பழக்கம் தொற்றியுள்ளது. காமிக்ஸ் கதாபாத்திரங்களில் காணும் காஸ்ட்யூம்களை வாங்கி தர சொல்வான்; விடுமுறை நாள் முழுக்க, காமிக்ஸ் ஹீரோக்கள் அணிந்திருக்கும் காஸ்ட்யூம் போட்டு திரிவான்.விடுமுறைக்கு மறுநாள், சீருடை அணிந்து பள்ளிக்கு கிளம்பி விடுவான்; இதுவரை, 200க்கும் மேற்பட்ட வகையில் காஸ்ட்யூம் தைத்து கொடுத்துள்ளோம்; அவனது வினோத பழக்கத்தை நிறுத்த ஒரு வழி சொல்லுங்கள்.மகன் அணியும் உடைகளைக் கண்டு தவிக்கும் அம்மா...விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்தால், குட்டி ஸ்பைடர் மேனை பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும், குட்டி பேட்மேனையும், குட்டி சூப்பர்மேனையும் பார்க்கலாம் போல தெரிகிறது.வாவ்... நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறது; காமிக்ஸ் காஸ்ட்யூம்களில், உங்கள் மகன் இருப்பதை, ஒன்று விடாமல் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்; பின்னாளில் பார்த்து மகிழ உதவும்.காமிக்ஸ் அல்லது கார்ட்டூன் நடிகர்களின் ஆடை அணிந்து உலாவுவது தவறே இல்லை; ஆனால், காமிக்ஸ் நடிகராக கற்பனை செய்து, செயலில் இறங்குவது தான் ஆபத்தானது.நான் சொல்கிறபடி செய்யுங்கள்... மகனை மடியில் அமர்த்தி, விரும்பும் சாக்லெட் காட்டி, பேச்சுக் கொடுக்கவும்!'செல்லக்குட்டி... காமிக்சிலும், கார்ட்டூன்களிலும் பார்க்கும் கதாநாயகர்கள், கற்பனை கதாபத்திரங்கள். யாரோ ஒரு எழுத்தாளர், கற்பனையில் உருவாக்கியவை. மனிதனால், பறவை போல் சுயமாக பறக்க முடியாது; மீன் போல் சுயமாய் நீருக்குள் சுவாசிக்க முடியாது... 'மனிதனால், ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களுடன் சண்டையிட்டு ஜெயிக்க முடியாது. லட்டு சாப்பிட்டால், சூப்பர் சக்தி கிடைக்காது; விரலை துப்பாக்கி போல பாவித்து சுட முயன்றால், ஏமாற்றம் தான் மிஞ்சும்; முகமூடியை மாட்டிக் கொண்டால், நினைத்த உருவத்துக்கு மாறலாம் என்பது எல்லாம், வாழ்வில் நடக்கவே முடியாத கற்பனை!'பறக்கும் கம்பளம் பொய்; அலாவுதீனும் அற்புத விளக்கில் வரும் பூதம் அக்மார்க் கற்பனை; மோட்டு என்ற கதாபாத்திரம் சமோசா தின்றால், 100 மனிதர்களுக்குரிய சக்தி கிடைக்கும் என்பது எல்லாம் ரீல்...'கேடயத்தை சுற்றினால், எதிரிகள் வீழ்வர் என்பதெல்லாம் உடான்ஸ் தான். மொத்தத்தில், காமிக்ஸ், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், உன் போன்ற சிறுவர்களை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட கற்பனை. பொழுதுபோக்குவதற்கு தயாரிக்கப்படும் படங்களை, நிஜம் என நம்புவது வாழ்க்கைக்கு உதவாது. கற்பனை என்று புரிந்து, காமிக்ஸ், கார்ட்டூன் ஹீரோக்களை ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது தான் பாதுகாப்பானது...'அது போன்ற படங்களைப் பார்த்து முடித்ததும், பெற்றோருக்கு மகனாக, படிக்கும் சிறுவனாக, பவுதிக விதிகளுக்கு உட்பட்டவனாக மாறி விட வேண்டும்.'சூப்பர் ஹீரோக்கள் அணியும் காஸ்ட்யூம் போல் போட்டுக் கொள்; அதற்குள் இருப்பது, எட்டு வயது சிறுவன் என்பதை நிதர்சனமாக உணர்ந்து செயல்படு. நீயும் பெரியவனானவுடன், கற்பனை ஹீரோக்களை உருவாக்கி அட்டகாசமாக கதை எழுது! அந்த கதை, லட்சக்கணக்கான சிறுவர்களை மகிழ்விக்கட்டும்...'இன்னும், ஆயிரக்கணக்கான கற்பனை கதாபாத்திரங்களின் காஸ்ட்யூம்களை கேள்; தைத்து உனக்கு அணிவிக்கிறோம். எங்களுக்கு உன் பாதுகாப்பு மிக முக்கியம்...'நீ படித்து பெரிய ஆளாகி, பெரிய பெரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும்; அதுவே, எங்களின் வேண்டுதலும் விருப்பமும். அதனால், காஸ்ட்யூம் அணிந்த பின், எந்தவித சாகசங்களிலும் ஈடுபட முயலாதே...' என அறிவுரைத்து, கன்னத்தில் முத்தமிடவும்!வரும் ஞாயிறன்று வந்தால், மகனை எந்த சூப்பர் ஹீரோ காஸ்ட்யூமில் பார்க்கலாம்?- அன்புடன், பிளாரன்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !