உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (107)

அன்பு மிக்க பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 13; பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி; அம்மா இல்லத்தரசி; அப்பா, தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். அம்மாவுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போட தெரியவில்லை. எப்போது பார்த்தாலும், கீரை தான்; அதுவும், மாடுகளுக்கு வைக்கோல் போடுற மாதிரி சமைப்பாள்; அம்மாவின் கீரை சமையலிலிருந்து விடுதலை பெற வழி சொல்லுங்கள் ஆன்டி.அன்பு மகளுக்கு...கீரை சமையலை இழிவாக பார்க்காதே; முளைக்கீரை, ரத்த சோகையை நீக்கும்; அகத்திக்கீரை, எலும்புகளை வலுவாக்கும். பொன்னாங்கண்ணி கீரை, பற்களும், எலும்புகளும் வளர்ச்சியடைய உதவும். பசலைக்கீரை, பார்வைக் குறைவை போக்கும்; வெந்தயக்கீரை, ரத்த சோகை நீக்குவதுடன், வயிற்றுப்புண் உபாதையை போக்கும்; புளிச்சகீரை, பார்வைக் கோளாறு நீக்கும்; முருங்கைக்கீரை, மாலைக்கண் நோய் வருவதைத் தடுக்கும்; அரைக்கீரை, தோல் நோய் ஏற்படாமல் தடுக்கும்; சிறுகீரை, மலச்சிக்கல் போக்கும்.கீரைகளை மிக ருசியாக சமைக்கலாம்; நான் எழுதியுள்ள பதிலை, உன் அம்மாவிடம் காட்டு. அவர்கள் புரிந்து கொள்ள வழி செய்யும். * பசலைக் கீரையுடன், கேரட், தேங்காய் துருவல், பாசிபருப்பு, கடலை பருப்பு சேர்த்து சமைத்து, தாளித்து உண்ணலாம்* துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு ஊற வைத்து, வேக வைத்து, கடைந்து, பாலக்கீரை, தண்டுக்கீரை அல்லது முளைக்கீரை சேர்த்து முப்பருப்பு கீரைக்குழம்பு தயாரிக்கலாம்* முடக்கத்தான் கீரையில் தோசை சுட்டு, தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.எந்த கீரையில் வேண்டுமானாலும் கட்லெட், வடை செய்யலாம். வெந்தயக் கீரையை, மட்டன் அல்லது உருளைக்கிழங்குடன் சேர்த்து பொரிக்கலாம். கூட்டு பொரியல் செய்யலாம்.கொத்தமல்லி கீரை மற்றும் புதினா கீரையில் தொக்கு செய்து, தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். பாலக் கீரையுடன் பனீர் சேர்த்து, சுவையான உணவு செய்யலாம்; பாலக்கீரையில் சாம்பார் செய்து, சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். முளைக்கீரையில் பொரியல் செய்து, ஆம்லேட்டை சுற்றி வைத்து சாப்பிடலாம்; அரைக்கீரையில், கடையலும், கூட்டும், பொரியலும் செய்யலாம்.குப்பைக்கீரை, புண்ணாக்கு கீரை, மூக்குத்தி கீரை, குப்பைமேனி கீரை, துளசி கீரை, கீழாநெல்லிக் கீரை, பண்ணை கீரை, குசிலிக்கீரை, முடக்கத்தான் கீரை, எலிக்காது கீரை, மணத்தக்காளி கீரை போன்றவற்றை ஆய்ந்து, புளித்தண்ணி ஊற்றி, தக்காளி, பூண்டு, மிளகாய் கிள்ளி போட்டு, வேக வைத்து, கலவைக்கீரை கூட்டு செய்து, சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.துாதுவளைக் கீரையில், நெய் விட்டு அரைத்து, துவையல் செய்யலாம்; அகத்திக்கீரையில் சாறு செய்யலாம்; புளிச்ச கீரையில், கோங்கரா சட்னி தயாரித்து, இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.நெய் காய்ச்சும் போது, முருங்கைக் கீரையை உருவி போடலாம்; அந்த முருங்கைக்கீரை மொறு மொறுப்பாய், சுவையாய் இருக்கும்.காசினிக்கீரையில் கூட்டு, பொரியல் செய்யலாம்; முள் முருங்கை இலையை புழுங்கல் அரிசியுடன் ஆட்டி அடை செய்யலாம்; தண்டு கீரையில், சாம்பாரும், பொரியலும் செய்யலாம்.கருவேப்பிலை சட்னி, இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம்; கேழ்வரகு அடையில், கீரைகளை சேர்க்கலாம்; எல்லா வகை கீரைகளிலும் சூப் தயாரிக்கலாம். இவ்வாறு கீரை சமையலில், ஆயிரக்கணக்கான சுவையான ரெசிபிகள் உருவாக்கலாம்.இது போல் சமைத்து, மகள்களின் உணவு விருப்பத்தை நிறைவேற்றுங்கள் சகோதரி!- என்றும் பாசத்துடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !