இளஸ் மனஸ்! (152)
அன்பு சகோதரி பிளாரன்சுக்கு...என் வயது, 40; இல்லத்தரசியாக இருக்கிறேன். எனக்கு இரு பிள்ளைகள்; மூத்தவள் பிளஸ் 2 படிக்கிறாள். இரண்டாமவன், 10ம் வகுப்பு படிக்கிறான். எனக்கு நீண்ட நாட்களாக, சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை கேள்விகளாக முன் வைக்கிறேன்.* நம் கல்வி திட்டம் சரியானது தானா * கல்வி மூலம் குழந்தைகள் தேவையான அறிவை பெறுகின்றனரா * நமக்கும், உலக நாடுகளின் கல்வி திட்டத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன* நம் கல்வி திட்டத்தை எப்படி மேம்படுத்தலாம். இப்படி, பல கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறேன். முறையான விளக்கம் தாருங்கள் சகோதரி.- இப்படிக்கு, மா.பத்மாவதி.அன்பு சகோதரி...நம் கல்விமுறையில், 90 சதவீதம் உதவாத, மனப்பாட பகுதிகள் தான் இருக்கின்றன. வாழ்க்கைக்கு உதவும் செயல்முறை பயிற்சிகள் அறவே இல்லை; படைப்பாற்றலோ, சுயசிந்தனை ஊக்குவிப்போ, மருந்துக்கும் கிடையாது.நம் கல்விமுறை வெறும் புத்தக புழுக்களை உருவாக்கி தள்ளுகிறது; தனித்தன்மையான உருவாக்கம் கிடையவே கிடையாது. விளையாட்டு இல்லை; எப்போதும் வேலை வேலை தான். உலக அறிவை கற்றுத் தருவதில் பூஜ்யமாக உள்ளது. உலகில், கல்வியில் சிறந்து விளங்குவது ஐரோப்பிய நாடான பின்லாந்து தான்.அதன் சிறப்புக்கான காரணங்கள்...* குழந்தைகள், ஏழு வயது வரை பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை* 16 வயது நிரம்பும் போது தான் பொது தேர்வு நடத்தப்படுகிறது* பாகுபாடு இன்றி, எல்லா குழந்தைகளும், ஒரே வகுப்பறையில் படிக்கின்றனர்* பள்ளியில் சேர்ந்த முதல், ஆறு ஆண்டுகளுக்கு எந்த தேர்வும் இல்லை* கற்கும் மாணவருக்கு, அரசு உதவி தொகை வழங்குகிறது* அதிக மொழிகளை கற்று கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்* ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு தினமும், 75 நிமிடம் ஓய்வு தரப்படுகிறது* ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு, நான்கு மணி நேரமே கற்பிக்கும் பணியை செய்கின்றனர்* எல்லாருக்கும் ஒரே பாட திட்டம்* எல்லா ஆசிரியர்களும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள்* முதல் நிலையில் வரும் பட்டதாரிகளே, ஆசிரியர் ஆகின்றனர்* ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர் சமமாய் மதிக்கப்படுகின்றனர்* மாணவர்களுடன், உணர்வுப்பூர்வமாக கலந்து பாடம் நடத்துகின்றனர் ஆசிரியர்கள்.மருத்துவக்கல்வி அளிப்பதில், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் சிறந்து விளங்குகிறது. கரீபியன் நாடான கியூபாவில், மருத்துவ கல்வி கட்டணம், தங்கும் வசதி, உணவு எல்லாம் இலவசம். இந்த நாட்டு மருத்துவர்கள், கொரோனா பெருந்தொற்று பாதித்த நாடுகளுக்குச் சென்று, அவசரகால மருத்துவ சேவை அளிக்கின்றனர். நம் கல்வி திட்டம் மோசமானது என விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், அரசு வழங்கும் கல்வியில் உச்சம் தொடுவோம். ஏட்டுக்கல்வியை கற்கும் அதே நேரத்தில், வாழ்க்கையை முழுமையாக படித்து, வெற்றியாளராக திகழ்வோம். கற்ற கல்வியை பிறருக்கு கற்பிப்போம் சகோதரி!- அன்புடன், பிளாரன்ஸ்.