உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (81)

அன்பு அம்மாவுக்கு...என் வயது, 18; இளங்கலை இயற்பியல் முதலாமாண்டு படிக்கிறேன்; தற்பெருமையடிக்கிறேன் என்று எண்ண வேண்டாம். உண்மையில் நான் மிகவும் அழகாக இருப்பேன். கச்சிதமான உயரம்; சிவந்த நிறம்; ஒல்லியான உடல்வாகு; சீரான பல் வரிசை. துாரத்திலிருந்து பார்ப்பவர்கள், என் அழகில் மயங்கி போவர். ஆனால், பக்கத்தில் வந்து பார்த்தால் கடுமையாக முகம் சுளிப்பர். காரணம், என் மேல் உதட்டில், ஆணுக்குள்ளது போல் அரும்பியிருக்கும் ரோமம். தோழியர், 'மீசைக்காரி...' என, செல்லமாக அழைப்பர். உறுத்தலாக இருக்கும்.இந்த பிரச்னையிலிருந்து மீள, நிரந்தர வழி சொல்லுங்க அம்மா.அன்பு மகளுக்கு...உன் பிரச்னையை, 'பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம்' என்பர்; பெண்ணின் கருப்பையிலிருந்து, அதிகப்படியாக ஆன்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதால் ஏற்படும் பிரச்னை இது. உடலில், 'அட்ரினல்கார்டெக்ஸ் ஆன்ட்ரோஜென்' அதிகம் சுரந்தாலும், பெண்களுக்கு மீசை வளரும். இதை, மருத்துவர் பரிந்துரைப்படி, மாத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம்.யாருக்கு மீசை வரும் என்று பார்ப்போம்... * குடும்பத்தில் பாரம்பரியமாக பாட்டி, அம்மாவுக்கு மீசை பிரச்னை இருந்தால், மகளுக்கும் வர வாய்ப்பிருக்கிறது* விளையாட்டு வீராங்கனை, 'ஸ்டிராய்டு' என்ற ஊக்க மருந்து உட்கொண்டால் வரும்* மெனோபாஸ் மற்றும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றத்தால் வளரக்கூடும்* நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற சுரப்பாலும் வளரலாம்* கணையம் பாதிக்கப்பட்டாலும் மீசை முளைக்கும்.சிலருக்கு, மேலுதட்டில் மட்டுமன்றி, முகவாயில், மார்பில், தொடையில், வயிற்றில், புட்டத்தில் அதிகப்படியாக ரோமம் வளரும். அவற்றை, மருத்துவர் ஆலோசனையுடன் உரிய சிகிச்சை மூலம் நீக்கலாம். தேவையற்ற ரோமத்தை நீக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றலாம்...'பிளக்கிங் அண்ட் ட்வீசிங்' தேவையற்ற ரோமங்களை, 'ட்வீசர்' என்ற கருவியால் பிடுங்கலாம்; பிடுங்கிய இடங்களில் வீங்காமலிருக்க, ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம்; தொற்று ஏற்படாமல் இருக்க, கிருமி நாசினியைத் தடவலாம். உரிய ஆலோசனை பெற்று, சோடியம் டைடானியம் டை ஆக்சைடு, பேரியம் சல்பைடு கிரீம்களையும் தடவலாம்.பெண்களுக்கான அழகு நிலையங்களில், வாக்சிங், பிளிச்சிங் போன்ற முறைகளில் ரோமத்தை அகற்றுகின்றனர். அவற்றையும் முயற்சிக்கலாம்.லேசர் சிகிச்சை மூலம் நீக்கினால், ஆறு மாதங்கள் வரை தாங்கும். சில எளிய செயல்முறைகளும் பலன் தரும்...* அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறில், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, மேல் உதட்டில் தடவி, 20 நிமிடம் காத்திருந்து, குளிர்நீரால் துடைத்து எடுக்கலாம்* மஞ்சள் துாள் மற்றும் பால், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, மேலுதட்டில் தடவி, 20 நிமிடம் காத்திருந்து குளிர்நீரால் கழுவலாம்* முட்டை வெள்ளைக் கரு மற்றும் அரை தேக்கரண்டி மக்காச்சோளமாவு கலந்து, பசையாக்கி, மேலுதட்டில் தடவி, 20 நிமிடம் காத்திருந்த பின், ரோமத்தை உரித்தெடுக்கலாம்* வாசனையற்ற ஜெலட்டின், ஒரு தேக்கரண்டி, பால், ஒன்றரை தேக்கரண்டி, லாவண்டர் ஆயில், மூன்று சொட்டு கலந்து, 12 நொடிகள், 'மைக்ரோ ஓவன்' சூட்டில் வைத்து எடுக்கவும். அதை மென்மையான குச்சியால், மேலுதட்டில் தடவி குளிர்நீரில் கழுவலாம்.தினமும் ஒரு வேளை புதினா கீரை தேநீர் அருந்தலாம். முகம், உடல் முழுக்க, இயற்கையில் விளைந்த மஞ்சள் தேய்த்து குளித்தால் பிரச்னை தீர வாய்ப்பு உண்டு. தினமும் இருவேளை, வானிகா கிரீம், மேலுதட்டில் தடவி வரலாம்.இவற்றில், எளிமையான ஒன்றை கடைபிடித்து, ரோமப்பிரச்னையை சீர்செய்து கொள்ள முயற்சிக்கவும். எதையும் கடைபிடிக்க முடியாவிட்டால், இதை பிரச்னையாக பார்க்காமல், வாழ்வில் முன்னேற முழு கவனத்தையும் செலுத்தவும்.- அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !