அழியாத கோலங்கள்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதுார், சுப்பிரமணியன் செட்டியார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில், 1979ல், 6ம் வகுப்பு படித்தேன். கவிஞர் கண்ணதாசன் பயின்ற பள்ளி இது. வகுப்பு ஆசிரியராக பிரபல எழுத்தாளர் அழகாபுரி அழகப்பன் இருந்தார். அவர் கதை, வசனம் எழுதிய, 'சக்களத்தி' என்ற சினிமா வெளியாகியிருந்தது. அது பற்றியே பேசிக்கொண்டிருப்போம். மதிய உணவு இடைவேளையில், ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு செல்வர். இவர் மட்டும், மர நிழலில் தனியாக குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார். அதைப் பார்க்கும் போதெல்லாம், 'கதை ஆசிரியராக வேண்டும்' என எண்ணுவேன். நுாலகத்தில் ஒரு புத்தகத்தையும் விடாமல் வாசித்தேன். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின், 'கோகுலம்' இதழுக்கு கதைகளை அனுப்பியபடி இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கடிதம் வந்தது. சன்மானமாக, 10 ரூபாய் கிடைத்ததும், ஆனந்தக் கூத்தாடினேன்.என் வயது, 53; வாசிக்கவும், எழுதவும் துாண்டுகோலாக இருந்த அந்த ஆசிரியரிடம் ஒருமுறையும் பேசியது இல்லை; பாடம் சம்பந்தமாகக்கூட சந்தேகம் கேட்டதில்லை. துாரத்தில் நின்றபடியே அவரை மனதில் வரைந்து, இன்றும் வணங்கி வருகிறேன்.- ஆ.மோகன், சிவகங்கை.