உள்ளூர் செய்திகள்

டெல் அவில்!

இஸ்ரேல் நாட்டின், இரண்டாம் மிகப் பெரிய நகரம், 'டெல் அவிவ்' குத்துவாள் போன்ற வடிவமுடைய நாடு. மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியிலுள்ள இந்த நாட்டில், பல மைல் நீண்டு கிடக்கும் கடற்கரையில், வெளீர் என்ற வெண்மை பளீரிடும் கட்டடங்களும், உணவு விடுதிகளும், கபேக்களும், மக்கள் கூட்டமும் நிறைந்த நகரம் இது.உல்லாசப் பயணிகளுக்கு உகந்த இடம். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் விடுமுறையை, கடல் குளியலும், சூரியக் குளியலுமாகக் கொண்டாட இந்நகருக்கு வருகின்றனர். கடற்கரை மணல்மேடுகளில் வண்ணக் குடைகளை விரித்து நிறுத்தி, அதன் நிழலில் படுத்தபடி, 'கூலிங் கிளாஸ்' அணிந்து கிறங்கிக் கிடக்கின்றனர்.டெல் அவிவ் நகருக்கு மற்றொரு பெருமையும் உண்டு. பல நுாற்றாண்டு காலமாக, உலகில் யூதர்கள் மட்டுமே வாழும் ஒரே நகரம், டெல் அவிவ். உலகில் சிதறிக்கிடந்த யூதர்களை திரட்டி ஒருங்கிணைந்து வாழ்வதற்காகவே உருவாக்கப்பட்ட நகரம். 'ஸியானிஸ்ட்' இயக்கத்தினரால், 1909ல் உருவாக்கப்பட்ட நகரம், டெல் அவிவ்.அனைத்து யூத மக்களும் தங்கள் தாயகமான புனித பூமிக்கு திரும்பி வரவேண்டும், என்பதற்காக உருவாக்கப்பட்ட நகரம், யூத மக்களுக்காக, 60 வீடுகள் கொண்ட காலனியை புராதன துறைமுகமான, 'ஜாபா'வின் மணல்மேடுகளில் உருவாக்கினர்.ஆரம்பத்தில் டெல் அவிவ், ஜாபாவின் புறநகராகவே இருந்தது. முதல் மகாயுத்தத்தின் போது, டெல்அவிவ் நகரமே இருந்த இடம் தெரியாமல் போயிற்று. படையெடுத்து ஆக்ரமிப்பு செய்த துருக்கியர்கள், டெல் அவிவில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் தங்கள் கப்பல்களில் ஏற்றிச் சென்றனர். பின், 1921ல் யூத மக்கள் திரும்பி வந்து, ஸியானிஸ்டுகளின் உதவியோடு புதிய நகரை நிர்மாணித்தனர். அதிலிருந்து, மேலும் மேலும் யூதர்கள் தங்கள் புனிதபூமிக்கு வரலாயினர். 40 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் டெல்அவிவ் நகரில் குடியேறினர். இஸ்ரேல் நாட்டின் தற்காலிக தலைநகராக, 1948ல் டெல்அவிவ் அறிவிக்கப்பட்டது. எந்தவொரு நாடும் இந்த நவீன யுகத்தில் விமானப் போக்குவரத்து இல்லையானால் வாழமுடியாது. ஆகவே, டெல் அவிவுக்கு சொந்தமான விமான நிலையம் உண்டு. தன்னுடைய, 'எல்-அல்' விமானங்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகள் பலவற்றின் விமானங்களும் இதன் விமான தளத்தில் இறங்கி, மீண்டும் பறக்கின்றன. இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு, 'ஜெட்' விமானங்களின் சீழ்க்கை ஒலியை கேட்டுக் கேட்டு பழக்கமாகி போயிற்று.இஸ்ரேல் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் கலாசார மையமாக டெல் அவிவ் விளங்குகிறது. இஸ்ரேலின் பல செய்தித்தாள்களும், புத்தகங்களும் ஹீப்ரூ மொழியில் வெளியாகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'ஜூயிஷ் ஒலிம்பிக் கேம்ஸ்' விழா, 'மகாபியா' என்ற பெயரில் நடைபெறுகிறது.விடுமுறை நாட்களை செலவழிக்க, டெல் அவிவ் வரும் மக்களில் பெரும்பாலோர், நகரை அடுத்துள்ள கிராமவாசிகளும், கிபுட்ஸ் எனப்படும் குடியிருப்புகளில் வசிப்போரும்தான்.நிழல்சாலைகள், பெரிய ஓட்டல்கள், நீரூற்றுகளும், மலர்ச்செடிகளும் கொண்ட சதுக்கங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பூங்காக்கள் இவைதான், 4 லட்சம் மக்களை கொண்ட, டெல் அவிவ் நகரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !