உள்ளூர் செய்திகள்

அடங்காத விடைகள்!

நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில், 1964ல், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டு தேர்வில், கணக்கு பாடத்தில், 10 கேள்விகளில், ஐந்துக்கு விடையளிக்க வேண்டும். ஆர்வ மிகுதியால், ஆறு கேள்விகளுக்கு விடை எழுதினேன். அனைத்தும் சரியாக இருக்க, முழு மதிப்பெண்கள் வழங்கி விட்டார் ஆசிரியர் சண்முகம். அதனால், மொத்த மதிப்பெண்கள், நுாறை தாண்டி விட்டது. மீண்டும் சரி பார்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சக ஆசிரியரிடம் சரி பார்க்க சொன்னார். அவர் உண்மையை விளக்க, ஆசிரியருக்கு என் மீது அடங்காத கோபம். பின், 'தேர்வின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தான் விடை எழுத வேண்டும்...' என கண்டிப்புடன் கூறினார்.உண்மையில், தெரியாமல் செய்த பிழை தான் அது. உயர் வகுப்புகள் படித்த போதும், இந்த நிகழ்வு நினைவு வர, தேர்வு எழுதி முடித்து, சரி பார்த்த பின்பே விடைத்தாளை ஒப்படைப்பதை வழக்கமாக்கி கொண்டேன்.என் வயது, 64; இன்றும் அந்த நிகழ்வு மனதில் நிறைந்துள்ளது.- வை.ஐயப்பன், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !