அதோ... அந்த பறவை போல..
உலகம் முழுவதும் காணப்படுவது பறவைகள் மட்டும் தான். புள், குரீஇ என, பொதுப்பெயரிட்டு அழைத்தனர் பழந்தமிழர். இறக்கையுடன் இரு கால்களைக் கொண்ட உயிரினம். இவற்றை, 30 பெரும்பிரிவுகளாக அறிந்துள்ளனர் பறவையியல் அறிஞர்கள். அவை, உலகம் முழுவதும், 9,672 வகைகளாக பறந்து திரிகின்றன. சில வினோத பறவைகள் பற்றி பார்ப்போம்...* ரேஸ் காரை விட வேகமாக செல்லும் திறன் கொண்டது, பருந்து. இதை, வேட்டைக்கு பழக்குவது, 4 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்கிறது. மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானிடம், 10 ஆயிரம் பருந்துகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது* உடலை விட, நீண்ட அலகை கொண்டது ஹம்மிங் பறவை. அலகு, 10 செ.மீ., நீளமுள்ளது. விசிலடிக்கும் வாத்துக்கு இறகுகளில், 25 ஆயிரம் துாவிகள் வரை இருக்கும். மிகச் சிறிய பறவையான ஹம்மிங் இறகில், ஆயிரம் துாவிகள் உண்டு* தென் அமெரிக்க நாடான பெரு கடற்பகுதியில் வாழும் இன்கா என்ற பறவைக்கு அழகிய மீசை உண்டு. விக்டோரியா என்ற வகை புறாவுக்கு தலையில் கீரிடம் உண்டு * ஆஸ்திரேலியா, டஸ்மானியா பகுதியில் வாழும் பறவை லையர். ஒருமுறை கேட்கும் குரலை அப்படியே மிமிக்ரி செய்யும் திறன் கொண்டது* மிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது, இமாலயன் கிர்பான் என்ற பருந்து. இது அழிந்து வரும் பறவையினத்தில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதை பாதுகாக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்* பசிபிக் கடலில் வாழும் பறவையினம் அல்பட்ரோஸ். வாத்து போன்ற கால்களைக் கொண்டது. இறக்கை விரித்தால், 4 மீட்டர் வரை இருக்கும். உலகின் பெரிய பறவைகளில் இதுவும் ஒன்று. ஆண்டிற்கு, 1.20 லட்சம் கி.மீ., பறக்கும். உலகை, 42 நாட்கள் பறந்து சுற்றி வந்துவிடும். காற்றின் திசையறிந்து, களைப்பின்றி நுட்பமாக பறக்கும் திறன் கொண்டது* பறக்க தெரியாத பறவை பென்குயின், செங்குத்தாக நின்றபடி நடக்கும். இவற்றில் பெரியது எம்பரர் பென்குயின். இது, 130 செ.மீ., உயரமுள்ளது. எடை, 22.45 கிலோ வரை இருக்கும். கடலில் 535 மீட்டர் ஆழத்தில், 18 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து சமாளிக்கும்.குழந்தைகளே... பறவைகளின் செயல்களில் இருந்து நல்ல பண்புகளை கற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டருகே பறந்து வலம் வருபவற்றை கூர்ந்து கவனியுங்கள்.