உள்ளூர் செய்திகள்

பொறாமை குணம்

ஓங்கி வளர்ந்திருந்த இலுப்ப மரக்கிளையில், சோர்ந்து உட்கார்ந்திருந்தது காகம்.எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி, ''ஏன் சோகமாக அமர்ந்துள்ளீர்...'' என கேட்டது. ''அதை ஏன் கேட்கிறாய்... நான் பறவையாய் பிறந்தது பற்றி கவலைப்படவில்லை; ஆனால், காகமாய் பிறவி எடுத்தது மிகவும் கவலை தருவதாக உள்ளது. மயிலைப் பார்... அதன் தோகைக்கும், ஆட்டத்திற்கும் மதிப்பும், வரவேற்பும் உள்ளது... நாட்டின் தேசிய பறவையாகவும் அங்கீகரித்துள்ளனர்...''குயிலைப் பார்... அதன் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது... அதுவும் என்னை மாதிரியே கருப்பு தான்... ஆனால், தேன் குரலால் வசந்தத்தை அழைக்கிறது... கிளியம்மா, உன்னையே எடுத்துக்கொள்... பெண்ணின் அழகு பற்றி கூற உன்னை தானே உதாரணம் சொல்கின்றனர்... ''இப்படி பெருமையும், மதிப்பும் உள்ள போது, என் இனத்துக்கு மட்டும் அப்படி இல்லையே... சற்று நேரத்துக்கு முன், பக்கத்து கிராமத்தில், ஒரு வீட்டு தோட்ட கிணற்றின் மீது அமர்ந்திருந்தேன்... இரண்டு பெண்கள், கிணற்றடிக்கு வந்தனர். அதில் ஒருத்தியின் முகம் வாடியிருந்தது...''உடனிருந்தவள், 'உன் முகம் வாடியிருக்கிறதே... மாப்பிள்ளை பிடிக்கவில்லையா...' என கேட்டாள். அவ்வளவுதான்... அந்த பெண், 'ஆமாம்... அவனும், அவன் மூஞ்சியும் அண்டங்காக்கை போல அட்ட கருப்பா இருக்கான்... நீ பாக்கலயா...' என வெறுப்புடன் கூறினாள். இது என் மனதை மிகவும் பாதித்து விட்டது...'' என்றது. ''அட அறிவில் ஆதவனே... உன் பெருமையே உனக்கு தெரியவில்லையே... சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வதால், 'ஆகாய துப்புரவாளன்' என அறிஞர்கள் உன் இனத்தைப் புகழ்கின்றனர். விசேஷ நாட்களில் மட்டுமின்றி, தினமும் சமைத்து முடித்தவுடன், முதலில் உனக்குத்தான் சோறு வைத்து மகிழ்கின்றனர்... ''ஒற்றுமைக்கு உதாரணமாய் உன்னைத்தான் சொல்கின்றனர்; சினிமா பாடல்களில் கூட இதை கேட்கலாம். இப்படிப்பட்ட பெருமை உள்ளவன் நீ... உன்னை தாழ்வாக எண்ணுகிறாய்... முதலில் பொறாமை குணத்தை விட்டால், உன் பெருமையும், மதிப்பும் புரியும்...'' என்றது.உள்ளம் பூரித்த காகம், ''ஆமாம்... இது எல்லாம் தெரியாமல் போனதே எனக்கு...'' என விண்ணில் தாவி மகிழ்வுடன் பறந்தது. பழம் தின்றபடியே, ''புரிந்தால் சரி...'' என பாடியது கிளி.கண்மணிகளே... பொறாமை என்பது தீய குணம். அது பாதிப்பை உண்டாக்கி விடும். பொறுமையும், அன்புமே வாழ்வில் சிறப்பை உண்டாக்கும்!- ஆ.சுபக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !