உள்ளூர் செய்திகள்

பெரிய நீர்த்தேக்கங்கள்!

உலக அளவில், ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சில பெரிய அணைகள் குறித்த விவரங்களை பார்ப்போம்... நியூரெக் அணை: உயரமான அணைகளில் ஒன்று, மத்திய ஆசிய நாடான, தஜ்கிஸ்தானில் உள்ளது. இது, 297.5 மீட்டர் உயரமுள்ளது. சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இந்த நாடு இருந்த போது, 1980ல் கட்டி முடிக்கப்பட்டது.கிராண்ட் டிக்சன்ஸ் அணை: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ளது. டிக்சன்ஸ் ஆற்றின் குறுக்கே, 1961ல் கட்டி முடிக்கப்பட்டது. இது, 285 மீட்டர் உயரமும், 695 மீட்டர் நீளமும் கொண்டது.ஆண்டர்சன் ராஞ்ச் அணை: குன்றுகளின் இடையே மண் நிரப்பிக் கட்டப்பட்டுள்ள உயரமான அணைகளில் ஒன்று. அமெரிக்கா, இடாகோ மாநிலத்தில், தெற்கு போர்க், பாய்ஸ் என்ற நதிகளில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 4,196 அடி உயரத்தில் உள்ளது. இதன் உயரம், 137 மீட்டர்; நீளம், 405 மீட்டர். பாசனம், மின் உற்பத்தி, வெள்ள அபாயத் தடுப்பு போன்ற நோக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது.போர்ட் பெக் அணை: அமெரிக்கா, மிசவுரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதுவும் நீளமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் உயரம், 75 மீட்டர்; நீளம், 6,314 மீட்டர். இது, 1940ல் கட்டப்பட்டது. வெள்ள அபாய தடுப்பு, மின் உற்பத்தி, நீர்வழி போக்குவரத்து போன்ற நோக்கங்களுக்காக கட்டப்பட்டுள்ளது.கிராண்ட் கவுலீ: மிகப்பெரிய காங்கிரீட் அணை, அமெரிக்கா, வாஷிங்டன் நகரில் உள்ளது. இது, கொலம்பியா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. பாசனப் பயன்பாட்டுக்காக, 1948ல் கட்டி முடிக்கப்பட்டது. இதிலிருந்து, 19.44 லட்சம் கிலோ வாட் மின்சாரம் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இதன் உயரம், 165 மீட்டர்; நீளம் 1,291 மீட்டர். தர்பேலா அணை: அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ளது. இது, சிந்து நதியின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகமாக நீர் தேக்கி வைக்கும் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நம் நாட்டில் உள்ள ஹூராகுட் அணையும் அதிக கொள்ளளவுள்ள ஒன்று. இது, ஒடிசா மாநிலத்தில் ஓடும் மகாநதியில் கட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !