பாடம்!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, கே.எல்.கே.நாயுடு உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 6ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியராக இருந்தார் ராஜபுதியவன். நகைச்சுவை ததும்ப பாடம் நடத்துவார். அதே நேரம், தவறு செய்தால் கடுமையாக தண்டிப்பார்.ஒருநாள், 'எங்கள் பள்ளி!' என்ற தலைப்பில், கட்டுரை படைக்க கூறியிருந்தார். அதை எழுதி சமர்ப்பித்தோம். திருத்தியவருக்கு கோபம் தலைக்கேறியது. குறில், நெடில் எழுத்துக்களை பலர் சரியாக எழுதியிருக்கவில்லை. ஒரு கட்டுரை, 'ஏங்கள் பள்ளி!' என பிழைகளுடன் அமைந்திருந்தது. ஒரு நோட்டில் மாறுபட்ட கையெழுத்தை கண்டு, அந்த மாணவனை அழைத்து, 'இந்த கட்டுரையை எழுதி தந்தவர் யார்...' என்று கேட்டார். உண்மையை மறைத்து, 'நான் தான் எழுதினேன்...' என சாதித்து கொண்டிருந்தான். நீண்ட விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் அவன் அக்கா எழுதி கொடுத்ததை ஒப்புக் கொண்டான். உடனே அந்த மாணவியை அழைத்து, 'தம்பிக்காக நீ கட்டுரை எழுதி கொடுத்தது தவறு; அதுவும் எழுத்துப் பிழையுடன் உள்ளது. இனி, இதுபோல் செய்யாதே... தம்பிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாமே தவிர, காப்பியடிக்க உதவக்கூடாது... 'அவன் உணவை நீ சாப்பிட்டால் அவனுக்கு பசி தீருமா... பிறருக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறி நற்பெயர் வாங்க வேண்டும்...' என அறிவுரைத்து அனுப்பினார். அது, பெரும் பாடமாக அமைந்தது. என் வயது, 60; அன்று அந்த ஆசிரியர் புகட்டிய அறிவுரையை இன்றும் மனதில் ஏந்தி வாழ்கிறேன்.- ஆர்.ஸ்ரீகாந்தன், சென்னை.தொடர்புக்கு: 99406 95400