உள்ளூர் செய்திகள்

வாழ்க வையகம்!

நானும், என் பெற்றோரும் தஞ்சை செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தோம். எனக்கு ஐந்து வயது இருக்கும். அப்போது, சென்னையிலிருந்து ஒரு ரயில் வந்து நின்றது. அந்த ரயிலிலிருந்து இறங்கிய அப்போதைய முதல்வர் காமராஜர் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.என் தந்தை அவருக்கு வணக்கம் கூறியபடி, 'தங்களிடம் பேச வேண்டும்' என்றார். முதல்வரோ, 'அதற்கென்ன தாராளமாகப் பேசுவோம்...' என்று கூறியபடி அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார்.பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த என் தந்தை, முதல்வரின் மதிய உணவுத் திட்டத்திற்காக நிதி கொடுத்தார். உடனிருந்த என்னைப் பார்த்து, 'உன் பெயரென்ன?' என்றதும், நான் ஆங்கிலத்தில் பதில் கூறினேன். உடனே, அவர் என்னைப் பார்த்து, 'வெள்ளைக்காரனை நாட்டை விட்டே துரத்தியாச்சு; நீ நம்ம தமிழ் மொழியில்தான் பேசணும். புரிஞ்சுதா பாப்பா!' என்றார்.நானும், 'சரி!' என்றேன். மீண்டும் அவர், 'இந்த வையகம் நன்றாக இருந்தாதான் நாமெல்லம் நன்றாக இருக்க முடியும். வாழ்க வையகம்ன்னு எழுதணும்; பேசணும்!' என்றார்.அன்றிலிருந்து, நான் எழுதப் படிக்கத் துவங்கிய காலம் முதல், 'வாழ்க வையகம்' என்பதை இன்று என், 58 வது வயதிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். அந்த எளிமையான, நேர்மையான, தேசப்பற்றுள்ள ஒரு தமிழக முதல்வரிடம் நான் பார்த்து, பேசிய நினைவலைகள் எல்லாம் இன்றும் என் மனதில் பசுமையாக நிறைந்திருப்பது எனக்கு கிடைத்த ஒரு பெரிய மகாபாக்கியமாக கருதுகிறேன்.- எம்.பிரேமலதா மகாதேவன், தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !