உள்ளூர் செய்திகள்

ஆலமரமான சேமிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், ரெட்டமங்கலம் கிராம ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் பிள்ளையார் சாமன். பொது ஒழுக்கத்தை வளர்ப்பதில் வல்லவர்.ஒரு நாள், பாடம் நடத்திய போது, சிறு சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். சேமிப்பின் அவசியம் மனதில் ஆழமாக பதிந்தது. அதையடுத்து, 'ஹார்லிக்ஸ்' பாட்டில் மூடியில், சிறிய ஓட்டை போட்டு, உண்டியலாக மாற்றி காசு சேர்க்க ஆரம்பித்தேன்.உயர்நிலைப் பள்ளி, கல்லுாரியில் படித்த காலத்திலும் சேமிப்பு தொடர்ந்தது. மத்திய அரசு பணியில் சேர்ந்து, சம்பளம் வாங்கிய போதும் சேமித்தேன். சிறுதுளி பெரு வெள்ளமாக மாறி, வீடு, கார், மகள் திருமணம் என சிறப்பாக உதவியது.இப்போது என் வயது, 66; அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். என் ஓய்வூதியத்திலும், சேமிப்பை தொடர்கிறேன். என் பேர குழந்தைகளுக்கும், சிறுசேமிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தி, உண்டியல் கொடுத்து தொடர செய்துள்ளேன். பள்ளி வகுப்பறையில் என் மனதில் விதைத்த சேமிப்பு என்னும் விதை, இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு இலையிலும் அந்த ஆசிரியரின் முகத்தை பார்க்க முடிகிறது.- ஆ.ப.பன்னீர் செல்வம், சென்னை.தொடர்புக்கு: 95662 58120


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !