அறம் செய்ய விரும்பு!
அவேசத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார் நாதன். புரியாமல் பார்த்தான் மகன் குமார்.''பள்ளி சிறுசேமிப்பு திட்டத்தில், பணம் எவ்வளவு இருக்கு...''தந்தையின் கேள்வியால் திகைத்தான். யோசனைக்கு பின், ''5000 ரூபாய் இருக்கும்...'' என்றான். ''அவசர செலவுக்கு தேவைப்படுகிறது; வகுப்பு ஆசிரியரிடம் கூறி, அந்த பணத்தை எடுத்து வா...''''கல்வி ஆண்டின் இடையில் எடுக்கலாமான்னு தெரியலைப்பா...''''ஆசிரியரிடம் பேசிட்டேன்; எடுக்கலாம்ன்னு கூறினார்...'' பதில் கேட்டு, செய்வதறியாது கலங்கி நின்றான் குமார். நிலைமையை சமாளிப்பது பற்றி மனம் சிந்திக்க துவங்கியது. அவசரமாக வெளியேறினான்.எதுவும் புரியாமல், ''அப்படி என்ன அவசரமா அந்த பணத்துக்கு செலவு வந்தது...'' என கேட்டாள் அம்மா.''எல்லாம் காரணமாக தான்...''''பதற்றப்படாம விஷயத்த சொல்லுங்க...'' ''அலுவலகத்தில், இருந்து திரும்பிய போது, வகுப்பு ஆசிரியரை பார்த்தேன்; அவரிடம், சிறுசேமிப்பில் இருக்கும் பணத்தை கேட்டிருக்கான் குமார். பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னானாம்... மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக பணத்தை வாங்கியிருக்கிறான்...''''குமாரா... இப்படி பொய் சொன்னான்...'' புலம்பிய மனைவியை தேற்றினார் நாதன்.மறுநாள் - முன்னறையில் பணிகளை கவனித்து கொண்டிருந்தார் நாதன். குமாருடன் படிக்கும் சிறுவனுடன் வந்த முதியவர், ''உங்க மகன் கொடுத்த பணத்தை, திருப்பி தர வந்தோம்...'' என நன்றி பெருக்குடன் ஒப்படைத்தார்.ஒன்றும் புரியாமல், ''எப்ப வாங்கிய பணம்...'' என்றார் நாதன்.''என் மகனும், மருமகளும் சில நாட்களுக்கு முன் விபத்துல சிக்கினர்; குடும்பத்தில் பண நெருக்கடி ஏற்பட்டது. கல்விக் கட்டணம் செலுத்த முடியலை... ''இதை உங்க மகனிடம் கூறியிருக்கிறான் என் பேரன். உடனே சிறு சேமிப்பில் இருந்த பணத்தை கொடுத்து உதவியுள்ளான்... இன்று தான் எனக்கு பென்ஷன் வந்தது... திருப்பித் தர வந்தேன்...'' என நெகிழ்ந்தார் முதியவர்.மகன் பெருந்தன்மையால் மகிழ்ந்தனர் பெற்றோர்.தளிர்களே... உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.வி.ஆர்.சுபாங்கினி