உள்ளூர் செய்திகள்

சிகப்பழகி! (7)

முன்கதை: செவ்வாய் கிரகத்தில் நடந்த அதிகார போட்டியில் தோற்ற சிகப்பழகி, பழி தீர்க்கும் வகையில் பூமிக்கு வந்தாள். தஞ்சை பெரிய கோவிலுக்கு கல்வி சுற்றுலா வந்த மாணவி கீதாவுக்கு மன்னர் கால நிகழ்வுகளை காட்டி ஆர்வத்தை துாண்டினாள். இனி -மன்னர் கால நிகழ்வுகளை கண்டதும் கீதாவின் ஆர்வம் அதிகமானது.'மன்னர் என்றால், அரண்மனை, தடாகம் மற்றும் நந்தவனம் மிக முக்கியம் என்பர். ராஜராஜன் அமர்ந்த அழகிய சிம்மாசனத்தை தரிசித்து, மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது, நந்தவனத்தையும் காண இருக்கிறேன்'நினைவுகளில் ஆழ்ந்தாள் கீதா. அவள் மனம் அழகிய மயில்கள் தோகை விரித்தது போல் மலர்ந்தது. குயில்கள், 'கூ... க்கூ... க்கூ...' என பாடின. மெய் மறந்து போனாள்.சிகப்பழகியின் கண்கள், 'பட...பட...' வென அடித்தன. அங்கு பச்சை, நீலம், சிகப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு என பல வண்ணங்களில் வாசமிகு பூக்கள் குலுங்கின.விதவிதமான வண்ணத்து பூச்சிகள் தேன் குடிக்க பறந்தபடி இருந்தன. 'ஆஹா... அற்புதம்... இதுவல்லவோ நந்தவனம்; இங்கிருந்து தானே கூடை கூடையாக பூக்கள் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு போகும்... என் தாத்தா கூற கேட்டிருக்கிறேன். கோவிலுக்கு எவ்வளவு மலர் மாலைகள் தேவைப்படும். அதற்கு தகுந்தாற்போல் தானே நந்தவனமும் இருக்கும்' எண்ணங்கள் உதிக்க உற்சாக மிகுதியால், வண்ணத்து பூச்சியை பிடிக்க சென்றாள் கீதா.திட்டம் கைகூடி வருவது பற்றி மனதுக்குள் சிரித்தபடி, பின் தொடர்ந்தாள் சிகப்பழகி. அப்போது, நீரில், 'கல... கல...'வென சத்தம் கேட்டது.''என்ன இது...'' என்றாள் கீதா.'உஷ்... பேசாதே... இங்கேயே நில்...'''ஏன், என்ன காரணம்...'' 'கேள்விகள் கேட்காதே... சற்று பின்வாங்கி செல்...' என்றாள் சிகப்பழகி.''அப்படி என்றால் குளிப்பது...'''உன் எண்ணம் சரி தான்; நீ பார்க்க விரும்பிய மன்னர் ராஜராஜன் மனைவியும், பட்டத்து மகாராணியுமான வானமாதேவியும், மன்னரின் மதிப்பிற்குரிய சகோதரி குந்தவை நாச்சியாரும் தான்...'''அப்படியா... என்னே உன் சக்தி! என்னையும் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்து செல்லேன். அங்கு உன்னை போல் சக்தி கிடைக்கும் அல்லவா. மன்னரின் சுரங்கம் பார்த்தேன்...''ஆஹா... என்ன வேலைப்பாடு; எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன், நெளிவு, சுளிவுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது. என் மனதை கொள்ளை கொண்டதோ, ராஜராஜன் அமர்ந்த வைரம் பதித்த தங்க சிம்மாசனம்...''ஆஹா... நான் பாக்கியம் செய்தவள். யாருக்கும் காண கிடைக்காத அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது...'' பெரிதும் மகிழ்ந்தாள் கீதா. ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சிகப்பழகியின் கைகளை பற்றி, கண்களில் ஒற்றிக் கொண்டாள். அப்போது, திடீரென பெரும் அறிவிப்பு சத்தம் கேட்டது.'மகாராணியார் மற்றும் குந்தவை நாச்சியாரின் தோழியர் தவிர, மற்ற யாவரும் வெளியேறலாம்...'பெரும் குரலாக இருந்தது அந்த அறிவிப்பு. நந்தவனத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த பெண்கள் வெளியேறினர்.அதே நேரம், அழகிய பட்டுப் புடவைகளை கொண்டு வந்தனர் தோழியர். சற்று நேரத்தில், முழு நிலா போல, வானமாதேவியும், குந்தவை நாச்சியாரும் அன்ன நடைபோட்டு வந்தனர். அகல கண்களை விரித்து, இமை மூடாமல் பார்த்தாள் கீதா.'உன் ஆசை நிறைவேறியதா...' என்றாள் சிகப்பழகி.''ஓ... ஆனால், இன்னும் மன்னர் ராஜராஜனை பார்க்கவில்லையே...'' என்றாள்.பெரும் குரல், 'ராஜாதி ராஜ... ராஜ கம்பீர குல திலக... ராஜ மார்த்தாண்ட மாமன்னர்... சோழர் குல திலகம் ராஜராஜன் வருகிறார்...' என்றது.''இப்போது நந்தவனத்தில் மன்னருக்கு என்ன வேலை...'''மாமன்னர் ராஜராஜன் தன் சகோதரி குந்தவை நாச்சியார் மீது அளவு கடந்த அன்பும், பக்தியும் உடையவர். அதனால், நந்தவன தடாகத்தில் அவர் குளித்ததும் வணங்கி, தடாகத்தில் குளித்து எழுவார் மன்னர்...'பின், அருமை மனைவி மற்றும் தமக்கை, அன்பு மகன் ராஜேந்திரனுடன், சுரங்க பாதை வழியாக, தஞ்சை பெருவுடையார் கோவில் சென்று, சிவனை வழிபட்டு, அரண்மனை திரும்பி உணவு அருந்துவர்.'அதோ பார்... மாமன்னர் ராஜராஜன் வருகிறார்; என்ன கம்பீரம்... என்ன வலுவான தேகம்; எத்தனை கூர்மையான மீசை; தினவெடுக்கும் பெரும் தோள்கள்...' உணர்ச்சி பெருக்கெடுக்கும் வகையில் வர்ணித்தாள் சிகப்பழகி. - தொடரும்...ஜி.சுப்பிரமணியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !